Share via:
தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியிருக்கிறது, கள்ளக்குறிச்சி
கள்ளச்சாராய மரணங்கள். தமிழக அரசு அலட்சியமாக இந்த விவகாரத்தைக் கையாண்ட காரணத்தாலே
மரண எண்ணிக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில்
கள்ளச் சாராயம் அருந்திய சிலர் வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் என்று மருத்துவமனையில்
அட்மிட் ஆனார்கள். மளமளவென மரணங்கள் நிகழத் தொடங்கின.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டராக இருந்த ஷ்ரவன்குமார் இதனை கள்ளச்சாராய
மரணம் என்று அறிவிக்காமல், மெத்தனால் குடித்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
அதனாலே கள்ளச்சாராயத்தில் இறந்த சுரேஷ் என்பவரின் இறுதிச்சடங்குக்குச் சென்றவர்களும்
கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்த கொடுமை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதுவரை 109 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை,
சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை
வரை 35 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து விழித்துக்கொண்ட தமிழக அரசு கலெக்டர் ஷ்ரவன் குமாரை
மாற்றிவிட்டு எம்.எஸ். பிரசாத்தை நியமனம் செய்தது. மேலும் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு
டிஎஸ்பி தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்
கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிச்செல்வி,
திருக்கோவிலூர் உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர்கள்
ஆனந்தன், சிவசந்திரன், காவல் நிலைய எழுத்தரும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளருமான பாஸ்கரன்,
திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ்குமார் ஆகியோரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடந்த அவசர ஆலோசனைக்
கூட்டத்துக்குப் பின்னர் கள்ளச் சாராயம் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் யாரேனும் சிகிச்சைக்கு வராமல் இருக்கின்றனரா என வீடு
வீடாகச் சென்று சோதனை செய்து அழைத்து வந்து சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்ட எம்.எஸ்.பிரசாந்த் இன்று
மருத்துவமனை மற்றும் கள்ளச்சராயம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் கருணாபுரம் பகுதியில்
ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஒரு சின்ன அலட்சியம் எத்தனை பெரிய விபரீதத்தை உண்டாக்கிவிடும்
என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. அரசு முதலிலேயே இதனை கள்ளச்சாராய சாவு என்று அறிவித்திருந்தால்
இத்தனை மரணங்கள் நிகழாமல் காப்பாற்றியிருக்க முடியும்.
இவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்போகிறதா தி.மு.க. அரசு என்பது தான்
இப்போது மிகப்பெரும் கேள்வி.