Share via:
பப்பு என்று பிரதமர் மோடியில் இருந்து அத்தனை தலைவர்களும் கேலி
செய்துவந்த ராகுல் காந்தி, இன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருக்கிறார்.
’நாங்கள் விரும்பும் வரையில் தான் மோடி ஆட்சியில் இருக்க முடியும்’ என்று தெறிக்க விடும்
ராகுலுக்கு நாடு முழுவதும் இருந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிகின்றன.
ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதற்கு ஒரு தெளிவான சித்தாந்தம்
வைத்திருக்கிறார் ராகுல் காந்தி. 30 லட்சம் வேலைகள், ஜாதிவாரி கணக்கெடுப்பு, பெண் முன்னேற்றம்,
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம், தொழிலாளர்க்கு உத்திரவாதம் போன்றவை ராகுலின் சீரிய
சிந்தனைக்கு எடுத்துக்காட்டு.
குரலற்ற மக்களின் குரல்களை காது கொடுத்துக் கேட்பது, அவர்களின்
வலிகளைப் புரிந்துகொள்ளவே இந்தியா முழுக்க நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் கடந்த
1970-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி பிறந்தவர். ஆகவே, ராகுல் காந்தி இன்று தனது 54வது பிறந்த
நாளைக் கொண்டாடுகிறார்.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரனாகவும்,
நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் மகனுமான ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி, தன் இடைவிடாத
உழைப்பால் காங்கிரஸ் கட்சியின் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
400 இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்புகளை
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மூலம் தவிடு பொடியாக்கிய ராகுல் காந்தி, இரண்டு
மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும்
அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், “அன்புச் சகோதரர் ராகுல் காந்திக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள். நம் நாட்டு மக்களின் மீதான தங்களின் ஈடுபாடு உங்களை மிகப்
பெரும் உயரங்களுக்கு இட்டுச் செல்லும். வரும் ஆண்டு தங்களுக்குத் தொடர்ந்து முன்னேற்றத்தோடும்
வெற்றியோடும் திகழ வாழ்த்துகிறேன் ” என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நாடு முழுக்க
தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
வருங்கால பிரதமருக்கு வாழ்த்துக்கள் என்று காங்கிரஸ் தொண்டர்கள்
போஸ்டர் ஒட்டி கொண்டாடுகிறார்கள்.