Share via:
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் திடீரென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஆந்திர மாநிலத்திற்கான தேவைகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி பிரதமராக ஆட்சியமைக்க பெரும் பங்கு வகித்தது ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் வெற்றிதான்.
இந்நிலையில் முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து முதல் முறையாக டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது போலாவரம், அமராவதி தலைநகர் கட்டமைப்பு பணி குறித்தும், ஆந்திராவுக்கு கூடுதல் நிதி மற்றும் வரி சலுகைகள் குறித்தும் நாயுடு கோரிக்கை வைத்ததாக தெரிய வந்துள்ளது.
பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன்னதாக அவர், வர்த்தகத்துறை மந்திரி பியூஷ்கோலை சந்தித்தார். அதோடு மத்திய மந்திரிகள் நிதின்கட்கரி, சிவராஜ்சிங் சவுகான், அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாக உள்ளன. அதோடு ஆபத்து வேளையில் கைகொடுத்து உயர்த்திவிட்ட சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கையை எப்படியாயினும் நிறைவேற்றிய கட்டாயத்தில் பா.ஜ.க. உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது சந்திரபாபு பேசியது என்ன என்பது குறித்து அவர் ஆந்திராவை சென்றடைந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.