Share via:
விருதுநகர் தொகுதியில் வெற்றிக்கு அருகே வந்து தோற்றுப் போன விஜயபிரபாகரன்
டெல்லி தேர்தல் ஆணையத்தில் மறு வாக்கு எண்ணிக்கை கேட்டு மனு கொடுத்திருக்கிறார். இதையடுத்து
பேசிய விஜயபிரபாகரன், ‘தோல்வியைக் கண்டு பயப்படுகிறது கட்சி தே.மு.தி.க. அல்ல, மறு
வாக்கு எண்ணிக்கையில் தோல்வி அடைந்தால் மார் தட்டி வரவேற்று ஏற்றுக்கொள்கிறேன். கஷ்டப்பட்டு
உழைத்து அங்கீகாரம் கிடைக்காததால் ஏற்பட்ட வலியின் வெளிப்பாடு இது’ என்று பேசியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் திடீரென நாம் தமிழர் அணியினர் தே.மு.தி.க. மீது
பாய்ந்திருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக், ‘மறைந்த விஜயகாந்த்
அவர்கள் ஒரு நல்ல மனிதர்; மனிதநேயர்! எண்ணற்றோருக்கு உதவிகள் செய்திருக்கிறார்; உணவளித்து
இருக்கிறார்; நிறைய இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் வாழ்வளித்து இருக்கிறார்.
தனிப்பட்ட நபராக அவரைப் போற்றுவதற்கு நிறைய இருக்கின்றன; மாற்றுக்கருத்தில்லை. ஆனால்,
விஜயகாந்த் முன்வைத்த அரசியல் ஒரு மோசமான முன்உதாரணம்.
அவர் அரசியலின் மீது நிறைய விமர்சனங்களும், முரண்களும் உண்டு.
இருந்தபோதிலும், அதனை தற்போது பேச விரும்புவதில்லை; மறைந்துவிட்டமையால், அவர் செய்த
நற்காரியங்களையும், நற்பண்புகளையுமே போற்றுகிறோம். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்
கொண்டு, அவரது அரசியல் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி, புனிதப்படுத்த முயல்வது ஏற்புடையது
அல்ல.
அவர் மீது தமிழக மக்களுக்கு எழுந்திருக்கும் அனுதாபத்தை அரசியல்
ஆயுதமாகப் பயன்படுத்த முனையும் பிரேமலதாவின் அரசியல் அற்பத்தனமானது. விஜயகாந்த் அடக்கம்
செய்ய குழிக்குள் இறக்கப்பட்ட அதே வேளையில், “இந்த நல்ல நாளில்” என விளித்து,
” விஜயகாந்த் அரசியலை வெல்ல வைக்க வேண்டும்” என எல்லாக் கட்சியினரும் கூடி
இருந்தபோது பிரேமலதா பேசியது அரசியல் அநாகரீகத்தின் உச்சம்.
விருதுநகர் பரப்புரையிலோ விஜயபிரபாகரன், ” அப்பாவின் ஆன்மா
சாந்தி அடையணும். எனக்கு ஓட்டு போடுங்க” எனக் கேட்டது அபத்தத்தின் உச்சம்! விஜயகாந்தைத்
தனிநபராகப் போற்றலாம்; ஆனால், அவர் முன் வைத்த அரசியலை ஏற்க முடியாது. அவர் இறந்துவிட்டதால்,
அவரது நற்பண்புகளைப் போற்றுவோம்; விமர்சனங்களைத் தவிர்ப்போம் என்பதுதான் அறம். அதனை
முழுதாக் கடைப்பிடிப்போம். அதற்காக அவரது அரசியலை நியாயப்படுத்தவோ, புனிதப்படுத்தவோ
முயல வேண்டாம்’ என்று பதிவு போட்டிருக்கிறார்.
இது, தமிழர். தெலுங்கர் பஞ்சாயத்தின் தொடர்ச்சி என்கிறார்கள் நாம்
தமிழர் தம்பிகள்.