Share via:
பாட்டாளி மக்கள் கட்சி இடைத்தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால், இந்த
தேர்தலை புறக்கணிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டிருப்பதை தமிழ்
நியூஸ் நவ் முதலிலேயே சொன்னது. அதன்படியே எடப்பாடி பழனிசாமி தேர்தல் புறக்கணிப்பு செய்திருக்கிறார்.
தொடர்ந்து 10 தோல்விகள் சந்தித்திருப்பதால், இந்த தேர்தலில் தோல்வி
அடைவது மிகப்பெரும் பின்னடைவாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். மேலும்,
பா.ஜ.க. மற்றும் பா.ம.க.வினர் அதிக பணம் கொடுக்கும் பட்சத்தில் மூன்றாம் இடத்துக்கு
அ.தி.மு.க. போகவும் வாய்ப்பு உண்டு. ஆகவே, இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவை
எடப்பாடி பழனிசாமி எடுத்திருக்கிறார்.
இதனை புத்திசாலித்தனமான முடிவு என்று அ.தி.மு.க.வினர் கூறிவந்தாலும்
கடுமையான எதிர்ப்பும் இருக்கிறது. யார் இரண்டாவது கட்சி என்ற பெருமையை பா.ஜ.க. கூட்டணிக்கு
எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுத்தது வரலாற்றுப் பிழை என்று கருதுகிறார்கள்.
தமிழ்நாட்டில் இதற்கு முன் அதாவது, 2009 ஆண்டு நடைப்பெற்ற தொண்டாமுத்தூர்,
பர்கூர்,கம்பம், இளையான்குடி,ஶ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளில் நடைப்பெற்ற இடைத்தேர்தலை
அதிமுக புறக்கணிப்பதாக அன்றைய பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார். ஆனால்,அடுத்து
வந்த திருச்செந்தூர்,வந்தவாசி தொகுதிகளில் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் பங்கேற்பதாகவும்
இனி இடைத்தேர்தல்களை புறக்கணிக்க மாட்டோம் எனவும் அம்மையார் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
ஆனால், ஜெயலலிதா வழியில் நடப்பதாக சொல்லும் எடப்பாடியார் அவர்கள்
அம்மையாருக்கு எதிரான முடிவை எடுத்து மீண்டும் அதிமுகவுக்கு துரோகம் செய்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் என்ற அதிமுகவின் நிலைப்பாடு, அக்கட்சியை
மேலும் வலுவிழக்கவே செய்யும்.
முன்பு ஜெயலலிதா இடைத்தேர்தலை புறக்கணித்த போது, மூன்றாவது அணி
எதிர்திசையில் இல்லை. தற்போதைய சூழல் வேறு. திமுகவிற்கு எதிர்க் கட்சி அதிமுக தான்
என நிரூபிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பை அதிமுக இழந்திருக்கிறது.
பாஜக கூட்டனியே ‘எதிர்கட்சி’ என சித்தரிப்பதற்கான வாய்ப்பை அதிமுகவே வழங்கியிருக்கிறது.
எதிர்கட்சி’ வரிசையிலிருந்தே
அனைத்து தலைவர்களும் தங்கள் கட்சியையும் தங்கள் தலைமையையும் வளர்த்திருக்கிறார்கள்.
இதுவரை இடைத்தேர்தல்களை புறக்கணித்தே வந்த பாமக விக்கிரவாண்டியில்
போட்டியிட முடிவு செய்தமைக்கும், அதிமுக புறக்கணித்தமைக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஏற்பட்டிருப்பதாகவே சொல்ல முடியும். அதிமுகவின் இந்த புறக்கணிப்பு முடிவு மறைமுகமாக
கூட அல்ல; நேரடியாகவே பாஜக கூட்டணியில் உள்ள பாமகவை ஆதரிப்பதாகவே அர்த்தம் என்கிறார்கள்.
இந்த விஷயத்தில் பிரேமலதாவே மிகப்பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
பா.ம.க.வுடன் உறவு வைக்கும் பட்சத்தில் தங்கள் கூட்டணிக்குச் சிக்கல் என்பதால் திகிலில்
இருக்கிறார் பிரேமலதா.
எது எப்படியோ, தி.மு.க.வுக்கு கொண்டாட்டம் தான்.