Share via:
எருமை மாடு மாதிரி பிள்ளைங்க வளர்ந்த பிறகும் என்னுடைய குட்டிப்
பையன், செல்லப்பொண்ணு என்று கொஞ்சுவது தாய்மையின் ஸ்பெஷல். அந்த வகையில், ஒரு சின்னப்
பையனை ஜெயிக்கட்டும்னு பெரும் தன்மை இல்லாம தி.மு.க. நடந்திருக்கு என்று ஒரு தாயாக
பொதுவெளியில் பிரேமலதா கேள்வி எழுப்பியிருப்பது சமூகவலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறது.
செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ‘’விருதுநகரில் விஜய பிரபாகரன்
தோற்கடிக்கப்பட்டுள்ளார். சூழ்ச்சியால் அவர் வீழ்த்தப்பட்டுள்ளார். அதற்கான ஆதாரங்கள்
எங்களிடம் உள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணும் மையத்தில் சொல்லப்பட்ட
அறிவிப்புகளுக்கும், ஊடகங்களில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள்
இருந்தது.
வாக்கு எண்ணும் மையத்தில் பல முறைகேடுகள் நடந்ததாக அங்கிருக்கும்
அதிகாரிகளே சொல்கிறார்கள். அங்கு ஆட்சியர், மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டு மணிநேரம்
வாக்கு எண்ணிக்கையை நிறுத்துகிறார். வாக்கு எண்ணிக்கை ஏன் நிறுத்தப்பட்டது?. “பல்வேறு
தரப்பிலும் இருந்து எனக்கு நிர்பந்தங்கள் அதிகமாக இருக்கிறது. என்னால் சமாளிக்க முடியவில்லை.
போனை சுவிட்ச் ஆப் செய்யப்போகிறேன்” என்று கலெக்டர் வெளியே வந்து கூறுகிறார். அப்படியானால்,
ஆட்சியரை செயல்படவிடாமல் தடுத்தது யார்?.
தேர்தல் முடிவு அறிவிக்கும் முன்னதாகவே, முதல்வர் 40 தொகுதிகளிலும்
திமுக கூட்டணி வென்றது என்கிறார். முதல்வர் அறிவிக்கும் முன்னர் நான்கு தொகுதிகளில்
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்துகொண்டு தான் இருந்தது. எதனை வைத்து முன்கூட்டியே வென்றுவிட்டோம்
எனக் கூறினார் என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.
வாக்கு மையத்தில் தவறு நடப்பதாக ராஜேந்திர பாலாஜி அங்கேயே முறையிட்டார்.
தேமுதிக, அதிமுக நிர்வாகிகள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என கோரினர். ஆனால்,
ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மிரட்டும் தொனியில் போலீஸ் படையை இறக்கினர். எனவே விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில்
முறையிட்டுள்ளோம்.” என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்திருக்கும் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு,
“தேர்தல் நடைமுறை முடிந்த பின் தேர்தல் மனுக்கள் குறித்து உயர்நீதிமன்றம் தான் உத்தரவிட
வேணடும். விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தொடர்பாக தேமுதிகவிடமிருந்து
இதுவரை புகார் எதுவும் வரவில்லை. புகார் வந்தால் தேர்தல் ஆணைய உத்தரவின் படி நடவடிக்கை
எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க.வும்
எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் வெற்றி, தோல்வியில்
மாநில அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதும் பிச்சை போடுவது போன்று சீட் கொடுக்க
முடியாது என்பதும் பிரேமலதாவுக்குத் தெரியவில்லை என்று கலாய்த்துவருகின்றனர்.