Share via:
தமிழக பா.ஜ.க.வில் தன்னைத் தவிர வேறு யாரும் வாயைத் திறக்கவே கூடாது
என்று கட்டிப்போட்டு வைத்திருந்தவர் அண்ணாமலை. எனவே, சீனியர்களும் அமைதியாக இருந்தார்கள்.
இப்போது முதன்முறையாக அண்ணாமலைக்கு எதிராக சீனியரான தமிழிசை செளந்தரராஜன் எதிர்க்குரல்
எழுப்பியிருப்பது கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழிசைக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் முடிந்துவிட்டதால் இனி
அவர் அமைதியாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை நினைக்கிறார். எனவே, பரட்டையின் நிலை
சிக்கலாகிவிட்டது, எதற்காக கவர்னர் பதவியில் இருந்து வந்தார் என்று பா.ஜ.க.வின் ஒரு
ஐ.டி. டீம் வேண்டுமென்றே கலாய்த்துக்கொண்டு அவரை வெறுப்பேற்றி வந்தனர்.
இதையடுத்து தி.முக. மீது பாய்வது போன்று நேரடியாக அண்ணாமலைக்கு
எச்சரிக்கை கொடுத்திருக்கிறார் தமிழிசை.
தமிழகத்தில் ஒரு தொகுதியில் வெற்றி பெறவில்லை என்பதால் அண்ணாமலையை
மாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படும் நிலையில், அந்த பதவியை அடைவதற்கு
தமிழிசை ஆர்வம் காட்டினார். அதனாலே அண்ணாமலை டீம் தீவிரமாக அவரை இணையதளத்தில் கலாய்த்ததாக
கூறப்படுகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தர்ராஜன், ‘‘அதிமுக- பாஜ
கூட்டணி அமைத்து இருந்தால் 35 இடங்கள் கிடைத்திருக்கும் என்ற எஸ்.பி.வேலுமணியின் கருத்து
உண்மையே. அதிமுக குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு அவரிடமே விளக்கம் பெறுங்கள். அண்ணாமலைக்கு
கூட்டணி அமைக்க விருப்பம் இல்லை. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நான் எந்த கருத்தும்
தெரிவிக்க விரும்பவில்லை. அண்ணாமலை சொன்னால், அது அவரது கருத்து. கூட்டணி என்பது அரசியல்
வியூகம். 2026 தேர்தல் குறித்து முடிவு செய்ய நிறைய கால அவகாசம் உள்ளது. கூட்டணி குறித்து
தேசிய தலைமைதான் முடிவு செய்யும். பாஜ ஐடி விங், அண்ணாமலை வார் ரூம் நிர்வாகிகளை எச்சரிக்கிறேன்.
கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன்’’ என்று அதிரடியாகப் பேசினார்.
பரட்டை என்று அவரை விமர்சனம் செய்வதை சுட்டிக்காட்டி, ‘நான் அழகின்னு என்னைக்கும் சொன்னதில்லை.
நான் பரட்டை தான். ஆனா, இது என்னோட நிஜம்’ என்று அடுத்தடுத்து அவர் தி.மு.க.வை குற்றம்
சாட்டினாலும் முழுக்க முழுக்க அண்ணாமலைக்குக் கொடுத்த எச்சரிக்கை என்கிறார்கள். எனவே,
சீனியர்கள் அனைவரும் தமிழிசைக்கு போன் போட்டு வாழ்த்து கூறிவருகிறார்கள்.