Share via:
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரும் ஆசையில் இருந்த பா.ஜ.க.வுக்கு
மைனாரிட்டி அரசை வழிநடத்தும் வாய்ப்பு தான் கிடைத்திருக்கிறது. இதற்கு முழு காரணமும்
மோடி என்று சீனியர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 2014, 2019 ஆகிய இரண்டு லோக் சபா தேர்தல்களிலும் பா.ஜ.க.
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால், இம்முறை தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றாலும் பாஜக 240 இடங்களை மட்டுமே கைப்பற்றியதால்
கடந்த முறை போல தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவானது. கூட்டணியில்
16 தொகுதிகளில் வென்ற தெலுங்கு தேசம், 12 இடங்களில் வென்ற ஐக்கிய ஜனதா தளத்தில் ஆதரவு
முக்கியமாக மாறியது. இந்தியா கூட்டணி அழைத்தாலும் இவர்கள் மோடிக்கு ஆதரவு தருவதாகச்
சொல்லியிருக்கிறார்கள்.
ஆகவே, ஜூன் 8ம் தேதி பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்க இருக்கிறார்.
இந்த மைனாரிட்டி அரசுக்கு நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் பா.ஜ.க.வுக்கு முழு
ஆதரவு தருகிறார்கள் என்றாலும், அவர்களுடைய கோரிக்கைகள் பலமாக இருக்கின்றனவாம். ஆர்.எஸ்.எஸ்.
வழிகாட்டுதல் இல்லாமல் மோடி தனி வழியில் சென்றதாலே இத்தகைய நிலை என்று கோபம் காட்டுகிறார்கள்.
பா.ஜ.க.வில் சீனியர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் வெளிப்படையாக தங்களின்
அதிருப்தியை காட்டி வருகின்றனர்.
இந்த வெற்றி குறித்து ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய த்தலைவர் ஜே.பி.
நட்டாவுக்கு மட்டுமே நன்றி தெரிவித்திருக்கிறார். மோடி, அமித் ஷா பற்றி ஒரு வார்த்தையும்
பேசவில்லை. நிதின் கட்கரி கடந்த சில ஆண்டுகளாகவே பிரதமர் மோடி, அமித் ஷா மீது கடும்
அதிருப்தியில் இருந்து வருகிறார். இவர் தனியே ஆதரவாளர்களுடன் கூட்டம் போட்டு பேசுவதாக
கூறப்படுகிறது.
இலாகா பிரிப்பில் உச்சகட்ட மோதல் நிலவுவதாக கூறப்படுகிறது. எல்லோரையும்
சரிக்கட்டி பதவியேற்பு விழா 8ம் தேதி நடக்குமா அல்லது தள்ளிப் போகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
மைனாரிட்டி அரசில் ஒரு சின்ன பிரச்னை வந்தாலும் சீனியர்கள் ஒன்று
சேர்ந்து வெளிப்படையாக மோடிக்கு எதிராக குரல் கொடுத்து அவரை பதவியில் இருந்து அகற்றிவிட்டு,
புதிய பிரதமரை அமர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் சந்திரபாபு நாயுடுவை ஸ்டாலின் சந்தித்துப்
பேசியது பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. மாநில நல்லிணக்கப் பேச்சு என்று ஸ்டாலின்
சொன்னாலும், மோடிக்கு குடைச்சல் ஆரம்பம் என்பதாகவே கூறப்படுகிறது.