Share via:
சீமான் ஒரு போதும் பேச்சு மாறுவதே இல்லை. கடந்த எல்லா தேர்தல்களிலும்
நடந்தது போன்று இந்த தேர்தலிலும் அத்தனை தொகுதியிலும் தோற்றுப் போயிருக்கிறார். இந்த
தேர்தலிலும், ‘வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி’ என்று வழக்கம்போல் சிரிக்கிறார்.
அதேநேரம், சீமானின் நாம் தமிழர் கட்சி இந்த முறை 8.22% வாக்குகள்
பெற்றுள்ளது ஆச்சர்யமான விஷயம். இத்தனைக்கும் அவர்கள் வழக்கமாக வைத்திருந்த கரும்பு
விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு ஒலிவாங்கி சின்னம் புதிதாக கொடுக்கப்பட்டு அதுவும் தேர்தலுக்கு
சில தினங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டது. புதிய சின்னத்தை வைத்து குறிப்பிட்ட வாக்கு
சதவீதத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.
ஆனால், 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி டெபாசிட் பறி கொடுத்துள்ளது.
சிவகங்கை தொகுதி நாம்தமிழர் வேட்பாளர் எழிலரசி டெபாசிட் வாங்கிவிட்டார் என்றும், நாம்
தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறிவிட்டது என்றும் நாம் தமிழர் தம்பிகள்
கூறுவது தவறான தகவல் ஆகும்.
ஏனென்றால், டெபாசிட் தொகை பெற வேண்டும் என்றால் 16.67% வாக்குகள்
பெற வேண்டும். அதனை எழிலரசி பெறவில்லை. மேலும் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்
என்றால் இரண்டு எம்.பி. சீட் பெற வேண்டும். இந்த முறையே விடுதலை சிறுத்தைகள் மாநிலக்
கட்சியாக அங்கீகாரம் பெறுவது குறிப்பிடத்தக்க விஷயம்.
அதேநேரம், 15 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒரு லட்சம் வாக்குகளை
தாண்டி இருக்கிறது. ஆனால், இதேபோல் ஒவ்வொரு தேர்தலிலும் தோற்பதை மட்டுமே பயிற்சியாக
எடுத்துக்கொண்டே இருப்பதால் யாருக்கு என்ன லாபம் என்பதை சீமான் தான் சொல்ல வேண்டும்.