Share via:
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி வலிமையாக இருப்பதாலே தொடர் வெற்றி
பெற்று வருகிறது. இந்த கூட்டணியை உடைக்கும் வகையில் செல்வப்பெருந்தகையின் பேச்சு இருப்பதாக
தி.மு.க.வினர் கோபம் காட்டுகிறார்கள். செல்வப்பெருந்தகையை தலைமைப் பொறுப்பில் இருந்து
அகற்ற வேண்டும் என்று புகார் அனுப்புவதாக சொல்லப்படுகிறது.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,
‘தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்க வேண்டும். தொடர்ந்து கூட்டணியில் இருந்தால்
நமக்கான இலக்கை அடைய முடியாது’ என்று செல்வப்பெருந்தகை பேசினார்.
இதற்கு அந்த கூட்டத்திலேயே இ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘இப்போது நமக்கு
இருக்கும் பொது எதிரி பா.ஜ.க. அதனை அகற்றும் வரையிலும் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்க
வேண்டியது அவசியம். இண்டியா கூட்டணிக்கு 40 இடங்கள் கிடைப்பதற்குக் காரணம் ஸ்டாலின்’
என்று வெளிப்படையாக பதிலடி கொடுத்தார்.
தங்கள் கட்சியை வளர்ப்பதற்கு தலைவர்கள் ஆசைப்படுவது தவறு இல்லை.
எல்லா கட்சியினரும் அதையே விரும்புவார்கள். அதேநேரம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான
அ.தி.மு.க. கூட்டணிக்குச் சென்றால் அதிக இடமும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்று
செல்வப்பெருந்தகை விரும்புவதாக தகவல் சுற்றுவதே இந்த மோதலுக்குக் காரணம் என்கிறார்கள்.
இது குறித்து செல்வப்பெருந்தகை, ‘திமுக தலைவர் மீது நமக்கு
எப்போதுமே மதிப்பும், அன்பும், மரியாதையும் உண்டு. அவருடைய உழைப்பு, நேர்மை. தேர்தல்
காலத்தில் எந்தெந்த தொகுதிகளில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்று 10 நிமிடம்
விவாதிக்காமல் அவர் இருந்ததே இல்லை. அனைத்து தொகுதிகளையும் கண்காணித்துக் கொண்டே இருந்தார்.
திமுகவுக்கு எதிராக எது வந்தாலும், முதலில் எழுந்து சட்டப்பேரவையில் குரல் கொடுப்பது
காங்கிரஸ் பேரியக்கம் தான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது.
திமுகவை யாராவது தவறாக பேசினால், நான் குரல் கொடுப்பேன். காரணம்,
நாம் உண்மையான தோழமையுடன் இருக்கிறோம். அதுதான் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல்
காந்தி நமக்கு சொல்லிக் கொடுத்தது. நாம் எங்கு இருக்கிறோமோ அங்கு உண்மையாக இருக்க வேண்டும்.
அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவர்களுடைய கரத்தை
நாம் வலுப்படுத்த வேண்டும். அதெல்லாம் வேறு.
ஆனால், காங்கிரஸ் பேரியக்கத்துக்கு கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம்
வேறு. மற்ற கட்சிகளின் கொள்கை, கோட்பாடு வேறு. அதற்காக, நம்முடைய கட்சியை வலிமைப்படுத்தக்
கூடாது; பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைப் பேசக்கூடாது என்று சொன்னால், அது தவறு..’
என்று பேசியிருக்கிறார்.
இந்த நிலை தொடரும்பட்சத்தில் செல்வப்பெருந்தகை பற்றி ராகுலிடம்
புகார் சொல்லி அவரது பதவியை பறிக்க வேண்டும் என்று தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்
இப்போது கொதித்து வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சி என்றாலே உட்கட்சி கலாட்டாவும் வேட்டி கிழிப்பும்
சகஜம். அது, இப்போது தான் அரங்கேறத் தொடங்கியுள்ளது.