Share via:
இந்திய அரசுக்கு சொந்தமாக விமானங்களே இல்லாத நிலையில், பரந்தூரில்
இரண்டாவது விமான நிலையம் அமைப்பதில் தி.மு.க. அரசு உறுதியாக இருக்கிறது. பரந்தூர் பகுதியைச்
சேர்ந்த அத்தனை உள்ளாட்சி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த விஷயத்தில் அரசு
உறுதியாக இருக்கிறது. எனவே, பரந்தூர் மக்கள் தங்கள் சொந்த இடத்தை விட்டு ஆந்திராவுக்கு
அகதியாகச் செல்லும் முடிவு எடுத்திருப்பதாகத் தெரிவது அதிர்ச்சி அளித்துள்ளது.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின்
அறிவிப்பு வெளியான நாளில் தொடங்கி இன்று வரை எண்ணிலடங்கா போராட்டங்களை முன்னெடுத்த
பொதுமக்களின் உணர்வுகளை மதிக்காமல் பிடிவாதப் போக்குடன் தி.மு.க. நடந்துகொள்கிறது.
விளை நிலங்கள், நீர்நிலைகள், குடியிருப்புகளை அழித்து விவசாயிகள்
மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைக்கும் என்று தி.மு.க. கூட்டணியில்
உள்ள கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் அத்தனை எதிர்க் கட்சிகளும்
கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனாலும், பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்த
தமிழக அரசு நிர்வாகம் தீவிரம் காட்டுகிறது.
எனவே, இங்கு வசிக்கும் மக்கள் வேறு வழியின்றி நிலத்தை எழுதித்
தரும் கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். தொடர்ந்து தமிழகத்தில் தங்குவதற்கு விருப்பமின்றி
ஆந்திராவுக்கு இடம் பெயர இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே இது குறித்து, ‘சுதந்திர இந்தியாவில் தங்களை ஆட்சி செய்யும்
மாநில அரசை எதிர்த்து அம்மாநில மக்களே அகதிகளாக வெளியேறும் அளவிற்கு அவலநிலை ஏற்பட்டிருக்கிறது’
என்று டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சொந்த ஊர் மக்களை அகதிகளாக தமிழகத்தை விட்டு அகற்றுவதும், பெருமுதலாளிகளுக்காக
ஏர்போர்ட் கட்டித் தருவதும், நீர்நிலைகளை மூடுவதும் தான் திராவிட மாடலா என்ரு கேள்வி
எழுப்புகிறார்கள். பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவதற்கான
அறிவிப்பாணையை அரசு திரும்பப் பெறுவது மட்டுமே நல்ல தீர்வாக இருக்கும்.