Share via:
வாரிசு அரசியலை ஒழித்துக்கட்டுவோம் என்று மோடி முழங்கிக்கொண்டே
இருக்கிறார். அவர் சொல்வது சரி என்பதை சுட்டிக் காட்டும் வகையில் ராகுல் காந்தியின்
குடும்பத்தில் மூன்றாவது நபராக பிரியங்காவும் எம்.பி. ஆவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி
பெற்றார். தேர்தல் முடிவுகள் வெளியான 14 நாட்களுக்குள் அவர் ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா
செய்ய வேண்டும் என்பதால் இதற்காக காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் டெல்லியில்
நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர்
ராகுல்காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய கார்கே, ‘ரேபரேலி தொகுதியில் ராகுல் எம்பியாக நீடிப்பார். வயநாடு தொகுதியை
அவர் ராஜினாமா செய்வார். மேலும் வயநாடு மக்களவை தொகுதியில் பொது செயலாளர் பிரியங்கா
காந்தி போட்டியிடுவார்’ என்றும் தெரிவித்தார்.
அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு
தொகுதிகளுடனும் உணர்ச்சிபூர்வமான தொடர்பைக் கொண்டிருப்பதால், இது எனக்கு கடினமான முடிவு.
வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த ஐந்து வருடங்கள் மிகவும் அருமையான, மகிழ்ச்சியான
அனுபவமாக இருந்தது. வயநாட்டு மக்கள் எனக்கு ஆதரவையும், அன்பையும், மிகவும் இக்கட்டான
நேரத்தில் போராடும் ஆற்றலையும் கொடுத்தனர். அதை என்னால் மறக்க முடியாது. தொடர்ந்து
வயநாடுக்கு வருவேன். வயநாட்டுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மாநிலங்களுக்கும் 2 எம்.பி.க்கள் கிடைக்கும்’ என்றார்.
அடுத்துப் பேசிய பிரியங்கா காந்தி, ‘ராகுல் இல்லாததை வயநாடு மக்கள்
உணர விடமாட்டோம். வயநாட்டின் பிரதிநிதியாக வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் சொல்வதெல்லாம் ராகுல் இல்லாததை அவர்கள் உணர விடமாட்டேன். ராகுல் சொன்னது போல்
என்னுடன் அவர் பலமுறை வயநாடு வருவார். ஆனால் நான் கடினமாக உழைக்கிறேன். அதற்காக இன்னும்
முயற்சி செய்வேன். அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்து, ஒரு நல்ல எம்பியாக இருப்பேன்’
என்றார்.
ஏற்கெனவே சோனியா காந்தி மேல்சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யாக
இருக்கிறார். இப்போது ராகுல் எம்.பி. ஆகிவிட்டார். அடுத்து பிரியங்காவும் எம்.பி. ஆகப்
போகிறார். அப்படின்னா அடுத்தது பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவா என்று பா.ஜ.க.வினர்
கேள்வி எழுப்புகிறார்கள்.