News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தி தினம் தினம் புகைப்படம் போட்டுவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசு கல்லூரிகளுக்கு முதல்வர் நியமனத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் கடந்த பல மாதங்களாக காலியாக உள்ளன. அதனால், கல்லூரியின் அன்றாட நிர்வாகமும் மாணவர் சேர்க்கையும் பாதிக்கப்படுகிறது என்று டாக்டர் ராமதாஸ் குரல் கொடுத்திருக்கிறார்.

இது குறித்து டாக்டர் ராமதாஸ், ‘அரசு கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. முதல்வர்கள் இல்லாமல் அரசு கல்லூரிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம் ஆகும்.

கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்புவது என்பது கடினமான பணி அல்ல. கல்லூரி முதல்வர்கள் பணி மூப்பு அடிப்படையில் தான் நியமிக்கப்படுகிறார்கள். கல்லூரி ஆசிரியர்களின் பணி மூப்புப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. அதன் அடிப்படையில் ஒரே நாளில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் முதல்வர்களை நியமிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் முதல்வர்கள் யார், யார்? என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும். அதனால், முதல்வர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பே புதிய முதல்வர்களை தேர்வு செய்து நியமிக்க முடியும். அதை செய்ய அரசு தயங்குவது ஏன்? என்பது தான் தெரியவில்லை.

அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு மாதமோ, இரு மாதங்களோ காலியாக கிடந்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. ஆனால், தமிழ்நாட்டில் பல கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் 8 மாதங்களுக்கும் மேலாக காலியாகக் கிடக்கின்றன என்பது தான் கவலையளிக்கும் உண்மையாகும்.

2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் 13 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. இப்போது காலியிடங்களின் எண்ணிக்கை 60-க்கும் அதிகமாகி விட்டது. மே மாதத்தில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் தொடங்கும், ஜூன் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும் என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும். அதனால், மே மாதத்திற்கு முன்பாகவே முதல்வர் பணியிடங்களை அரசு நிரப்பியிருக்க வேண்டும். ஆனால், நிலையான முதல்வர்களை நியமிப்பதற்கு மாறாக பொறுப்பு முதல்வர்களை மட்டுமே நியமித்து கல்லூரி நிர்வாகத்தை நடத்த தமிழக அரசு முயல்கிறது. இது தவறான அணுகுமுறை ஆகும்.

நிலையான முதல்வர்களுக்கு மாற்றாக பொறுப்பு முதல்வர்களைக் கொண்டு கல்லூரியை நடத்துவதால், கல்லூரியின் கல்வி மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க அரசுக்கும் கூடுதல் செலவு ஆகிறது. தமிழக அரசு 2022-ஆம் ஆண்டில் பிறப்பித்த ஆணையின்படி, ஒரு கல்லூரியில் முதல்வர் பணியிடம் காலியாக இருந்தால், அந்த இடத்தில் மூத்த இணைப் பேராசிரியர் ஒருவரை பொறுப்பு முதல்வராக நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படுபவருக்கு அவரது மொத்த ஊதியத்தில் 20% அல்லது முதல்வர் பணிக்கான ஊதியத்தில் 50% இவற்றில் எது குறைவோ அதை கூடுதல் ஊதியமாக வழங்க வேண்டும்.

அதன் மூலம் பொறுப்பு முதல்வருக்கு மாதம் ரூ.40,000 வரை கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். இது நிலையான முதல்வருக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட அதிகம் ஆகும். கல்லூரிகளில் நிலையான முதல்வர்கள் இல்லாத சூழலில் மாணவர் சேர்க்கைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதையும், கல்லூரிகளின் கல்வி மேம்பாட்டுப் பணிகளையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து முதல்வர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கேட்டுள்ளார்.

முதல்வர் பணி நிரப்புவதற்கு பணம் விளையாடுகிறது என்றும் புகார் சொல்லப்படுகிறது. ஸ்டாலின் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link