Share via:
கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின்
தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் உடல் திருவள்ளூா் மாவட்டம் பொத்தூரில் திங்கள்கிழமை அதிகாலை
1 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது படுகொலை விசாரணை குறித்து சீமான் கூறியிருக்கும்
கருத்து கடும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல் கூராய்வு செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்
உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர் வசித்து வந்த பெரம்பூர் பகுதியில் உள்ள பந்தர் கார்டன்
மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டது. ஏரியாவைச் சேர்ந்த பொதுமக்கள், கட்சியினர், ஆதரவாளர்கள்
கதறி அழுதனர்.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி உத்தரப்பிரதேசத்தில்
இருந்து மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள்,
என பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் வருகையால் பெரம்பூர் பகுதியே ஸ்தம்பித்தது.
ஆம்ஸ்ட்ராங் உடலை சென்னை பெரம்பூா் பந்தா் காா்டன் தெருவில் உள்ள
பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவரது
ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி
தனது கணவர் ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை
மாநகராட்சி ஆணையருக்கு, சனிக்கிழமை மனு அளித்தாா்.
அந்த மனு பரிசீலிக்கப்படாததால், சென்னை உயா்நீதிமன்றத்தில் அவா்
அவசர வழக்கை தாக்கல் செய்தாா். இந்த வழக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நீதிபதி
பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா்கள்
சங்கரசுப்பு, ஆா்.கிருஷ்ணகுமாா் ஆகியோா் ஆஜராகி, ‘2,700 சதுர அடி நிலம் கொண்ட பகுஜன்
சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று வாதிட்டனா்.
அதற்கு அரசுத் தரப்பில் மூலகொத்தளம் மயானத்தில் இடம் ஒதுக்கியுள்ளதாக
தெரிவிக்கப்பட்டது. ஆவணங்களைப் படித்துப் பாா்த்த நீதிபதி, ‘மனுதாரா் கேட்கும் பந்தா்
காா்டன் தெரு மிகவும் குறுகியதாக இருப்பதால் உடலை அடக்கம் செய்ய அனுமதித்தால், எதிா்காலத்தில்
தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும் என்று நீதிபதி கருத்து தெரிவித்து வழக்கை நண்பகல்
12 மணிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டாா்.
நண்பகல் 12 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெற்ற போது தேமுதிக தலைவா்
விஜயகாந்த் உடலை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அரசு
அனுமதி வழங்கியதை சுட்டிக் காட்டி பொற்கொடி தரப்பில் வாதிடப்பட்டது. விசாரணை தள்ளிவைக்கப்பட்டு
2.15 மணியளவில் மீண்டும் நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டம், பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங்
உறவினா் லதா என்பவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் நிலத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க
வேண்டும் என்று மனுதாரா் தரப்பில் கூறப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் மாலை 4.45 மணி அளவில் பெரம்பூரிலிருந்து
திருவள்ளூர் மாவட்டம், பொத்தூருக்கு புறப்பட்டது. ஊர்வலத்தின் முன்னும், பின்னும் ஆயிரக்கணக்கான
ஆதரவாளர்கள், பொதுமக்கள், கட்சி பிரமுகர்கள், சினிமாபிரபலங்கள் கண்ணீர் மல்க பேரணியாக
நடந்து சென்றனர்.
இரவு 10 மணி அளவில் செங்குன்றத்தை அடுத்த பொத்தூர் ரோஜா நகருக்கு
ஊர்வலம் சென்றது. அங்கு உறவினர் லதா என்பவருக்கு சொந்தமானஒரு ஏக்கர் நிலத்தில் (புழல்
ஏரிக்கரை) ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு புத்தமத முறைப்படி இறுதிசடங்கு நடைபெற்றது.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்திருந்த 7 புத்த பிட்சுகள் 5
வாசனை திரவங்கள் மூலம் அவரது உடலை தூய்மைப்படுத்தினர். பின்னர், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு
வெண்மை நிற ஆடை உடுத்தி சந்தன பேழையில் வைத்து நள்ளிரவு 1 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அனைத்து கட்சியினரும் சிபிஐ விசாரணை கோரிவரும்
நிலையில் நாம் தமிழர் சீமான், ‘’நம்மிடமே ஆகச்சிறந்த காவல்துறை, உளவுத்துறை, சிபிசிஐடி
எல்லாம் இருக்கிறது. அதை விட்டுவிட்டு சிபிஐ சிபிஐனு ஏன் கத்திட்டு இருக்காங்கனு புரியல.
சிபிஐயிடம் வழக்கை மாற்றுவது என்பதே ஏமாற்றுவதுதான். இதுவரைக்கும் சிபிஐ விசாரித்து
எந்த விஷயத்தில் உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது
என்னுடைய மண்ணின் மகன் ஆம்ஸ்ட்ராங்கின் உயிர் பற்றி சிபிஐக்கு
என்ன அக்கறை இருக்கும்? அதெல்லாம் அவசியமற்றது. கொலை நடந்திருக்கிறது. குற்றம் நன்றாக
தெரிகிறது. 8 பேர் சரணடைந்திருக்கிறார்கள். அவர்கள் தான் உண்மையான கொலையாளிகளா என்பதுதான்
முதலில் தெரிய வேண்டும். அவர்கள் சரணடைந்திருக்கிறார்கள். போலீஸ் கைது செய்யல. இன்னும்
அவர்களை போலீஸார் விசாரிக்கவே இல்லை. அவனை விசாரித்தால்தானே உண்மை தெரியும். இவ்வளவு
பெரிய கட்சியின் தலைவர்களை கொல்லும் அளவுக்கு, உனக்கும், அவருக்கும் உள்ள பிரச்சினை
என்ன என்பதெல்லாம் அவர்களை விசாரித்தால் தானே வெளியே வரும். அதனால் எடுத்தும் சிபிஐ
சிபிஐனு கத்துவது சரியல்ல’’ என கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே
இவர், ‘துப்பாக்கியை அரசு திருப்பிக் கொடுத்திருந்தால் இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்காது’
என்று கூறியிருந்ததும், அதற்கு காவல் துறை மூலம், ‘துப்பாக்கி திருப்பிக் கொடுக்கப்பட்டது’
என்று பதில் கூறியதும் குறிப்பிடத்தக்கது.