Share via:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைதான் முதுகில் குத்தும் துரோகி என்று
கடுமையாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருக்கும் நிலையில், அண்ணாமலைக்கு ஆதரவாக
நிற்கும் ஓ.பன்னீர்செல்வம் கடுமையான கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும்
இடையில் வார்த்தைப் போர் நடைபெற்றுவருகிறது. இதுவரை அ.தி.மு.க.வின் மற்ற தலைவர்கள்
மட்டுமே அண்ணாமலை மீது விமர்சனம் செய்துவந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியும் நேரடியாக
தாக்கத் தொடங்கியிருக்கிறார்.
’’எங்கள் கட்சித் தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி
ஆகியோரை பற்றி மட்டமாக அண்ணமலை பேசிக்கொண்டு இருப்பதை ஏற்க முடியாது. அவர் நியமனத்
தலைவர் மட்டுமே. இன்று இருப்பார், நாளை காணாமல் போய்விடுவார். அவர் கண்ணாடியில் தன்னை
பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் யார் முதுகில் குத்துபவர் என்பது தெரியும்’’
என்று காட்டமாக விமர்சனம் செய்திருந்தார்.
அதோடு பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க முடியாது, அவர் செய்நன்றி மறந்தவர்
என்றும் விளாசியிருந்தார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், ‘எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி’
என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், ‘’துரோகம், பொய்மை, செய்நன்றி மறத்தல், வன்முறை
ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்கும் எடப்பாடி பழனிசாமி என்ன விசுவாசமற்றவன் என்று
பேட்டியளித்திருக்கிறார். என்னுடைய விசுவாசம் பற்றி பத்துத் தோல்வி பழனிசாமி பேசுவதற்குத்
தகுதியில்லை.
முதலமைச்சர் பதவி கொடுத்தவருக்குத் துரோகம், பரிந்துரை செய்தவருக்குத்
துரோகம், நான்கு ஆண்டு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவருக்குத் துரோகம், கழக ஆட்சியைக்
காப்பாற்றிக் கொடுத்தவருக்குத் துரோகம் செய்திருக்கிறர் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி பதவி வெறி பிடித்தவர், சுயநலவாதி என்பதை தமிழ்நாட்டுமக்கள்
நன்கு அறிவார்கள். ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி எடப்பாடி பழனிசாமிக்குத்
தெரிவித்த நேரத்தில் எனக்கு தூது விட்டு கெஞ்சியவர் எடப்பாடி பழனிசாமி. எனக்கு அதில்
விருப்பமில்லை என்றாலும் கட்சி எனக்குப் பின்னாலும் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று
விரும்பிய அம்மாவுக்காகவே இணைவதற்கு முடிவெடுத்தேன்.’’ என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.
அண்ணாமலை நேரடியாக பதில் அளிக்க முடியாமல் பன்னீர்செல்வம் மூலம்
பதில் சொல்கிறார் என்று சிரிக்கும் அ.தி.மு.க. மாஜிக்கள் பன்னீரை சமூகவலைதளத்தில் வறுத்தெடுக்கிறார்கள்.