Share via:
கேரளா மாநிலத்தில் மூளையைத் தின்று உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்
அமீபா தொற்று பரவல் காரணமாக 14 வயது சிறுவன், 13 வயதான சிறுமி மற்றும் 5 வயது குழந்தை
ஆகியோர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்வை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கர்நாடகாவில்
டெங்கு காய்ச்சலுக்கு 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்திருக்கிறது. அக்கம்பக்கத்தில்
பரவும் நோய்கள் தமிழகத்தில் பாதிக்காத அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று
கோரிக்கை எழுந்துள்ளது.
கேரளாவில் பிரைமரி அமிபிக் மென்கோன்செப்ஹாலிடிஸ் எனப்படும் தொற்று
இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவே மூளையைத் தின்னும் அமீபா எனப்படுகிறது. பொதுவாக
ஏரி, ஆறு, நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும் இந்த அமீபா மூக்கு வழியாக மூளைக்கு
பயணிக்கிறது. அங்கு மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் இந்த
தொற்று ஏற்பட்ட நபருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு மரணம் நிகழும்.
தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகிய சாதாரணமான அறிகுறிகளே
தோன்றும் என்றும் இந்த அமீபா வேகமாக வளரக்கூடியது. எனவே, எதனால் இந்த பாதிப்புகள் என்பதைக்
கண்டறிவதற்குள் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிடும் சூழல் ஏற்படுகிறது.
இந்த தொற்று மிகவும் அரிதானது என்பதால், சோதனை மூலம் இதனைக் கண்டறிவது
கடினமான ஒன்றாக உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் இறந்தபிறகே, இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது
கண்டறியப்பட முடிவதால் சவால் நிறைந்ததாக கருதப்படுகிறது.
அதேபோல் கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துவருகிறது. இதுகுறித்து
சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், ‘மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு
டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அதில் பெங்களூருவில் மட்டும்
2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது’’ என தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து தமிழக அரசு தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதாக
பொது சுகாதாரத் துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்
என்னும் மூளையை அரிக்கும் நோய் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததை
கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் குளிப்பதற்காக நீண்ட நாட்கள்
தேங்கி நிற்கும் தண்ணீரையோ அல்லது மாசுபட்ட தண்ணீரையோ பயன்படுத்த வேண்டாம். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள் போன்ற தண்ணீர் தேங்கி
இருக்கும் இடத்தைச் சுற்றிலும் சுற்றுப்புறச் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள், தனியாருக்கு சொந்தமான நீச்சல் குளங்களில்
மக்கள் நல்வாழ்வுத் துறை வழிகாட்டலின் படி சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். அடிக்கடி
குளோரினேஷன் செய்து பராமரிக்க வேண்டும். மேலும், 2 பிபிஎம் அளவிற்கு மேல் குளோரினேஷன்
செய்வதை உள்ளூர் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட
வேண்டும். மேலும் நீர்நிலைகளில் நுழைவதை கட்டுப்படுத்த வேண்டும்.
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கும்,
அறிகுறிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் உள்ளவர்களை கண்டறிய ஆலோசனை
வழங்கப்பட வேண்டும். மேலும், சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் உள்ளவர்களை உடனடியாக மூன்றாம்
நிலை பராமரிப்பு மையங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறது.
உஷாரா இருந்துக்கோங்க மக்களே.