Share via:
2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டுள்ள 328 தொகுதிகளில்
கண்டிப்பாக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உறுதியாக
நம்புகிறார்கள். எனவே, கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக
அறிவித்து பதவியேற்கச் செய்வது என்று காங்கிரஸ் வட்டாரத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று
கூட்டணிக் கட்சியினர் அழுத்தம் கொடுத்தால், கார்கேவுக்கு ஜனாதிபதி பதவி கொடுக்கப்படும்
என்ற உறுதி கொடுக்கப்படும் என்கிறார்கள்.
அதேநேரம், காங்கிரஸ் குறைவான தொகுதிகளில் வெற்றி அடைந்து கூட்டணிக்
கட்சிகள் அதிக இடம் பிடிக்கும் பட்சத்தில் ராகுல் காந்திக்குப் பதிலாக கார்கேவை பிரதமர்
வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டம் இருக்கிறதாம். ஆனால், கார்கே இந்த விஷயத்தில் பிரதமர்
வேட்பாளர் என்றால் ராகுல் காந்தி மட்டுமே என்பதில் உறுதியாக இருக்கிறார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன
கார்கே, “இந்தியா கூட்டணியில் என்னிடம் கேட்டால் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை
தேர்வு செய்வேன். ஏனென்றால், தேர்தலுக்கு முன் இரண்டு ‘பாரத் ஜோடோ யாத்ரா’க்களை வழிநடத்தியவர்.
அப்போது விரிவான பிரசாரம் மேற்கொண்டு, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மேடைகளைப் பகிர்ந்துகொண்டு
நெருக்கமாக இருந்தவர். மோடியை நேரடியாக எதிர்த்து தாக்கியவர். மேலும், அவர் நாட்டின்
இளைஞர்களையும், நாட்டின் நீள அகலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். எனவே அவரை
தேர்வு செய்ய வேண்டும்’’ என்பதே என் விருப்பம் என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் பா.ஜ.க.வுக்கு இழுபறி ஏற்படும் என்றால் நிதின் கட்கரி
தலைமையில் பா.ஜ.க.வில் ஒரு பிரிவினரை இழுத்து அவரையே பிரதமராக்கவும் இண்டியா கூட்டணி
தயாராக இருக்கிறதாம். எப்படியும் மோடியை பிரதமராக அமரவிடக் கூடாது என்பதில் இவர்கள்
உறுதியாக இருக்கிறார்கள்.