Share via:
தேர்தல் விதிமுறையை மீறி பிரதமர் நரேந்திர மோடி 1ம் தேதியன்று
மெளனப் பிரச்சாரம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கியிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம்
தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் மே 30ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
பிரசாரம் முடிவுக்கு வந்த பிறகு கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தங்குவதாக
அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் பிரசாரத்தை முடித்ததும் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு
விமானத்தில் வரும் பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரியில் உள்ள
அரசு விருந்தினர் இல்லத்திற்கு வருகிறார்.
அங்கு விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தும் அவர், அன்று இரவு
அங்கேயே தங்குகிறார். அடுத்த நாள் அதாவது மே 31ம் தேதி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில்
உள்ள தியான மண்டபத்திற்கு மதியம் 1:30 மணியளவில் செல்கிறார். இரவு 12 மணி வரை அங்குள்ள
விவேகானந்தர் சிலை முன்பாக அவர் தியானம் செய்வார் எனக் கூறப்படுகிறது. அதற்குப் பிறகு
கீழே உள்ள மண்டபத்துக்குச் செல்பவர், அடுத்த நாள் மதியம் வரை அங்கே இருந்து தியானம்
செய்யவிருக்கிறார்.
இதற்குப் பிறகு ஜூன் 1ம் தேதி பிற்பகலில் அங்கிருந்து புறப்பட்டு
ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் அன்று மாலை டெல்லி
செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு ஜூன் 1-ஆம் தேதிதான்
வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், கன்னியாகுமரிக்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, ’தேர்தல்
நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதல் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது’
என்று தெரிவித்திருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ்
தலைவர் செல்வப்பெருந்தகை, “வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில்
இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக மோடி அவர்கள் மறைமுகப் பிரச்சாரம் செய்ய
முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது, எனவே இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் கடிதம்
கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் மாண்புமிகு நீதிமன்றத்தையும் அணுகுவோம்’’ என்று
போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.