Share via:
தமிழக தி.மு.க. அரசுக்கும்
கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் உச்சபட்ச மோதல் நடந்துவருகிறது. கவர்னரின் அதிகாரம் குறித்து
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நிலுவையில் இருக்கிறது.
சாவர்க்கர் ஆங்கிலேயருக்கு
கடிதம் எழுதி மன்னிப்புக் கோரியவர் என்று தி.மு.க.வினர் விமர்சனம் செய்துவரும் நிலையில்
அவரது பிறந்த நாளை ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி கொண்டாடி இருப்பது பெரும் சர்ச்சையை
உருவாக்கியிருக்கிறது. இதுகுறித்து கவர்னர் ஆர்.என்.ரவி, ‘பாரதத் தாயின் மிகச்சிறந்த
மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தமான் செல்லுலார் சிறையிலும், 16 ஆண்டுகள் ரத்னகிரி சிறையிலும்
ஆங்கிலேயர்களால் உடலாலும் மனதாலும் சித்திரவதைகளை மிகவும் கொடூரமாக அனுபவித்த அவர்
ஒரு உறுதியான சுதந்திர போராட்ட வீரர்’ என்று கூறியிருக்கிறார்.
அதேபோல் தமிழ்நாடு
அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் இரண்டு நாள் மாநாட்டை இன்று
உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் தொடங்கி வைத்து பேசுகையில், ‘’தமிழ்நாடு ஆளுநராக
2021ம் ஆண்டு நான் பொறுப்பேற்ற போது இங்கு உள்ள பல்கலைக் கழகங்கள் மிகவும் மோசமான நிலையில்
இருந்தன. அவற்றில் சில பிரச்னைகளும் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக் கழகமும் மற்ற பல்கலைக்
கழகங்களுடன் தொடர்பு இன்றி தனித்தனியாக செயல்பட்டன. அவை தரம் குறைந்தும் காணப்பட்டன.
இவை எல்லாம் எனக்கு ஏமாற்றத்தைத் தந்தது. இவற்றை சரிசெய்து ஒன்றிணைக்கவே இந்த மாநாடு
மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
’’தவறான கல்வி கொள்கையால் படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் உள்ளனர்.
இளைஞர்களை கல்வித் திறன் மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும்.
இதுவே தொடர்ந்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்’’ என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தமிழகமே உயர்கல்வியில், வேலை வாய்ப்பில் முதல் இடத்தில்
இருக்கும் நிலையில், இப்படியொரு பிரச்னையை கவர்னர் எழுப்பியிருப்பது சர்ச்சையை எழுப்பியிருக்கிறது.