Share via:
தமிழக அரசியலில் சீமான், அண்ணாமலை ஆகிய இருவரும் என்ன பேசினாலும் அது வம்புச்சண்டைக்கு வழி வகுத்து விடுகிறது. அப்படித்தான் ’நடிகை விஜயலட்சுமிக்கும், சீமானுக்கும் ஏதாவது பிரச்சினை வந்தால், உடனே என்னிடம் சீமான் வம்பிழுப்பார்’ என்று அண்ணாமலை கூறியிருப்பது நாம் தமிழர் தம்பிகளை சூடேற்றியிருக்கிறது.
சமீபத்தில் அண்ணாமலை, ‘நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவாகும்’ என்று கூறியிருந்தார். இதுபற்றி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு, பாஜக தனித்து போட்டியிட்ட தொகுதிகளில் எத்தனை வாக்குகளை வாங்கியுள்ளது என்பதை பார்ப்போம். அந்த வாக்குகள், நாம் தமிழர் பெற்ற வாக்குகளை விட அதிகமாக இருந்தால், நான் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன்’ என சவால் விட்டார். மேலும், “ஆம்பளையாக இருந்தால் என்னை போல தனித்து நிற்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, ’நீங்க ஒரு விஷயத்தை கவனிச்சு பாருங்க. விஜயலட்சுமி அக்கா பேசும் போதெல்லாம் சீமான் அண்ணன் என்னை வம்பிழுக்க தொடங்கி விடுவார். சீமானை விஜயலட்சுமி அட்டாக் செய்தால், உடனே சீமான் என்னை அட்டாக் செய்வார். நான் என்னைக்காவது சீமான் அண்ணனை வம்புக்கு இழுத்திருக்கிறேனா சீமான் அண்ணன் தான் விஜயலட்சுமி பதில் கூற வேண்டும். அதற்கு ஏன் என்னை வம்பிழுக்கிறார் என்று தெரியவில்லை.
பாஜக இந்த முறை 19 இடங்களில் தனித்து போட்டியிட்டது. 4 இடங்களில் எங்கள் சின்னத்தில் சுயேச்சைகள் நின்றார்கள். இந்த 23 இடங்களில் பாஜக பெற்ற வாக்குகளையும், அதே இடங்களில் நாம் தமிழர் பெற்ற வாக்குகளையும் ஒப்பிட்டு பார்ப்போம். இதில் நாங்கள் வாக்கும் வாக்குகளில் 30 சதவீதத்தை கூட கழித்து விடுங்கள். இன்னும் 20 சதவீதத்தைக் கூட கழித்துவிடுங்கள். அப்போதாவது நாம் தமிழர் எங்கள் ஓட்டுகளை நெருங்குகிறதா என்று பார்க்கலாம்.
சீமான் அடிக்கடி ஏதாவது சொல்லிட்டு இருப்பாரு. போன தேர்தலில் கூட, மக்கள் நலக் கூட்டணியை விட அதிக வாக்குகளை நாம் தமிழர் பெறாவிட்டால், கட்சியை கலைச்சிடுறேனு சொன்னாரு. கட்சியை கலைச்சிட்டாரா என்ன? சும்மா சொல்றது தானே. சீமான் ஒரு அரசியல் கட்சியை நடத்துகிறார். அவரது குரலும் தமிழகத்திற்கு முக்கியம். எனவே நான் விதண்டாவாதம் செய்யவில்லை. சீமான் அண்ணன் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. எனவே, வேறு எதையோ திசை திருப்புவதற்காக எங்களை சீமான் இழுக்க வேண்டாம்” என அண்ணாமலை கூறினார்.
இதற்கு சாட்டை துரைமுருகன், ‘அண்ணன் சீமான் அவர்களின் கேள்விக்கு தர்க்க ரீதியாக பதில் சொல்ல முடியாத அண்ணாமலை தனிமனித விமர்சனத்தை அதே திராவிட ஓங்கோல்கள் வைக்கிற கேவலமான விமர்சனத்தை வைத்திருக்கிறார். தனிமனித ரீதியாக பதிலுக்கு பாஜகவை பேச ஆரம்பித்தால் ரொம்ப கேவலமா இருக்கும்’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
ஜூன் 4ம் தேதி நிறையவே காமெடி காட்சிகள் அரங்கேறும் போல் தெரிகிறது.