Share via:
ஜூன் 1ம் தேதியுடன் 2024 மக்களவைத் தேர்தல் முடிவுக்கு வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணமும் காந்தி பேச்சும் கடுமையான விமர்சனத்துக்கு
ஆளாகியிருக்கின்றன.
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள இருப்பதால்,
இந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாவுத்துறை,
கோவளம், சின்னமுட்டம், புதுகிராமம், ஆரோக்கியபுரம் கிராமங்களில் 1,000 படகுகள் கரையில்
நிறுத்தப்பட்டுள்ளது. மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் 10,000-க்கும் மேற்பட்ட
நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தேர்தல் விதிமுறை மீறல் என்று காங்கிரஸ் கட்சியினர்
தொடர்ந்து புகார் அளித்துவருகிறார்கள். அதோடு மோடியை தியானம் செய்ய அனுமதிக்கக்கூடாது
என்று கன்னியாகுமரி தி.மு.க.வினரும் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இதையடுத்து தமிழகம் முழுக்க, ‘கோ பேக் மோடி’
ஹேஸ்டேக் வைரல் ஆவதுடன் கருப்புக் கொடி போராட்டமும் நடைபெற இருக்கிறது. தமிழகத்தின்
பல பகுதிகளில் கோ பேக் மோடி போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது.
அதாவது மேற்கு வங்கத்தில் நடைபெறும் ஏழாவது கட்டத் தேர்தலில்,
அம்மாநில மைந்தன் விவேகானந்தருக்கு மரியாதை செலுத்துவது போன்று மோடி நாடகமாட கன்னியாகுமரி
வருகிறார் என்று புகார் கூறுகிறார்கள்.
அதேநேரத்தில் காந்தி திரைப்படம் வெளியான பிறகே மக்களுக்கு காந்தி
பற்றி தெரியவந்தது என்று மோடி பேசியிருப்பதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
செய்தியாளரிடம் பேசிய மோடி, ‘மகாத்மா காந்தி மிகவும் புகழ் பெற்ற
மனிதர். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்த நிலையில் மகாத்மா காந்தியைப்
பற்றி உலகத்துக்கு தெரிவித்திருக்க வேண்டியது நமது பொறுப்பு அல்லவா? ஆனால், உலக நாடுகளுக்கு
அவரைப் பற்றி அவ்வளவாக தெரியவில்லை. மன்னிக்கவும். காந்தி திரைப்படம் வெளியான பிறகுதான்
அவரைப் பற்றி உலக நாடுகளுக்கு தெரியவந்தது. அந்தப் படத்தை நாம் தயாரிக்கவில்லை. மார்ட்டின்
லூதர் கிங், நெல்சன் மண்டேலாவைப் பற்றி உலகம் நன்கு அறிந்திருந்த நிலையில், மகாத்மா
காந்தி அவர்களுக்கு சளைத்தவர் அல்ல. இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகத்தை சுற்றி வந்த
பிறகு இதைச் சொல்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்த பிறகே விவேகானந்தர் பற்றி
மக்களுக்குத் தெரியவந்தது என்று மோடி பேசினாலும் ஆச்சர்யம் இல்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட
கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கோமாளி போன்று பல வேடங்கள் போட
மோடி, கடைசியில் ஒரு பபூன் மாதிரி பேசுகிறார் என்று சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.