Share via:
கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வின் ஆதரவு இருப்பதை வைத்து இத்தனை
நாட்களும் போலீஸாருக்கு கண்ணாமூச்சு ஆடிவந்த பிரஜ்வல் ரேவண்ணா, தேர்தல் களேபரம் முடிந்திருக்கும்
நிலையில் இன்று கைதாவார் என்று தெரியவருகிறது.
இது குறித்து பிரஜ்வல் ரேவண்ணா வெளியிட்டிருக்கும் வீடியோவில்,
‘’‘மே 31-ம் தேதிகாலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் முன்னிலையில் நேரில்
ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்” என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பிரஜ்வல் ஜெர்மனியின் முனிச் நகரத்தில் இருந்து
பெங்களூருக்கு வியாழக்கிழமை நள்ளிரவு 12.05 மணிக்கு வந்துசேரும் லுஃப்தான்சா விமானத்தில்
பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த டிக்கெட்டின் நகல் ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து சிறப்பு
புலனாய்வு பிரிவு போலீஸார் பெங்களூரு விமான நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். விமானத்தில்
வந்திறங்கியதும் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய முடிவெடுத்திருப்பதாக மூத்த போலீஸ்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில்
முன் ஜாமீன் கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தனஞ்செய், ‘‘இந்த மனுவை அவசர மனுவாக கருதி உடனடியாக
விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என கோரினார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி, மே
31-ம் தேதி வழக்கை விசாரிப்பதாக கூறினார்.
பிரஜ்வல் பெங்களூருக்கு வந்து இறங்கியதும் கைது செய்யப்படுவார்
என்று தெரிகிறது. அதோடு பிரஜ்வலுடன் தொடர்புடைய மேலும் சிலரும் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.