Share via:
திருவண்ணாமலை சித்தர் என்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை
தன்னுடைய இல்லத்துக்குக் கூட்டிவந்து ஆசிர்வாதம் வாங்கிய விவகாரத்தில் பலருடைய விமர்சனத்துக்கு
ஆளான டிடிவி தினகரன் இப்போது நேரடியாக சசிகலா மீது மோதத் தொடங்கியிருக்கிறார்.
ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்று அண்ணாமலை கூறிய விவகாரத்தில்
சசிகலா கடுமையாக எதிர்ப்பு காட்டியிருந்தார். அவர் எல்லோருக்கும் பொதுவான தலைவர், அவரை
இந்துத்துவா தலைவர் என்று கூறக்கூடாது என்று எச்சரிக்கை செய்திருந்தார்.
அதோடு அ.தி.மு.க. மாஜி அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட பலரும் ஜெயலலிதா
இந்துத்துவா தலைவர் என்பதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சசிகலாவால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட டிடிவி
தினகரன் சசிகலா அறிக்கையை எதிர்த்து அண்ணாமலைக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்.
ஜெயலலிதா குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எதுவும் தவறாகக்
கூறிவிடவில்லை. ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்று கூறியது உண்மை என்று தெரிவித்திருக்கிறார்.
இதுவரை சசிகலா அறிக்கைக்கு எதிராக ஒருபோதும் தினகரன் பேசியதில்லை
என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக சசிகலா கூறியது தவறு என்று பேட்டியில் கூறியிருப்பது
வெளிப்படையான மோதலாக பார்க்கப்படுகிறது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று ஜெயலலிதா பெயரில் கட்சியை
வைத்துக்கொண்டு, ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என்று டிடிவி தினகரன் கூறியிருப்பது
கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பா.ஜ.க. ஆதரவு கிடைத்திருக்கும் தைரியத்தில் சசிகலாவுக்கு எதிராக
தினகரன் கருத்து கூறியிருக்கிறார் என்று அவரது ஆதரவாளர்களே வருத்தம் தெரிவிக்கிறார்கள்.