Share via:
உத்தரப் பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு
தாக்கல் செய்தார். அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இடம்பெற்றுள்ள
தகவல் படி மொத்த சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி. இதில் பெரும்பகுதி ஸ்டேட் பேங்க்
ஆஃப் இந்தியாவில் உள்ள ரூ.2.86 கோடி நிரந்தர வைப்புத்தொகை. கையிலிருக்கும் ரொக்கம்
ரூ.52.920. காந்திநகர் மற்றும் வாரணாசியில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் உள்ள தொகை
ரூ.80.304. தேசிய சேமிப்பு சான்றிதழில் ரூ.9.12 லட்சம் முதலீடு. ரூ.2.68 லட்சம் மதிப்புள்ள
நான்கு தங்க மோதிரங்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19 ஆண்டில் ரூ.11.14
லட்சமாக இருந்த பிரதமரின் வருமானம், 2022-23-ல் ரூ.23.56 லட்சமாக உயர்ந்துள்ளது
கடந்த மக்களவைத் தேர்தல்களின்போது பிரதமர் தனது பிரமாண பத்திரத்தில்
தாக்கல் செய்த மொத்த வருமானமும் இந்த முறை அதிகரித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர்
தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.2.51 கோடி என்றும், 2014-ம் ஆண்டு ரூ.1.66 கோடி என்றும்
குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடி தனக்கு சொந்தமாக எந்த நிலமும், பங்குகளும், மியூச்சுல்
ஃபண்ட் முதலீடும் இல்லை என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிரமாண பத்திரத்தில் பிரதமர் மோடி தனது மனைவி பெயர் யசோதாபாய்
என்றும், மனைவி என்ன வேலை செய்கிறார் என்பதும், அவரது வருமானம் குறித்து எதுவும் தெரியாது
என்றும் தெரிவித்துள்ளார். தான் அரசு சம்பளம் மற்றும் வங்கியின் வட்டியில் இருந்து
வருமானம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கல்வித் தகுதியைப் பொறுத்தவரையில், டெல்லி பல்கலைக்கழகத்தில்
1978-ம் ஆண்டு இளங்கலையும், 1983-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலையும் பெற்றிருப்பதாக
தெரிவித்துள்ளார். தன் மீது எந்தக் குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் இல்லை என்றும்
பிரதமர் மோடி தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேட்புமனு தாக்கலின் போது பிரதமர் மோடியுடன், 12 மாநில முதல்வர்கள்,
தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். அபிஜித் முகூர்த்தம் என்ற அரிதான முகூர்த்த
நேரத்தில் பிரதமர் வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமரின் வேட்புமனுவை 4 பேர் முன்மொழிந்து
கையெழுத்திட்டுள்ளனர். அப்போது பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங்,
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மாநிலத் தலைவர்
சவுத்ரி பூபேந்திர சிங் ஆகியோரும் சென்றிருந்தனர்.
வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், எஸ்பிஎஸ்பி
கட்சித் தலைவர் பிரகாஷ் ராஜ்பர், எல்ஜேபி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான், ஜிதன்ராம்
மாஞ்சி, பசுபதி பாஸ்வான் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின்
தலைவர்கள் மற்றும் பாஜக மாநிலத் தலைவர்கள் பேரணியாக சென்றனர். இந்தப் பேரணியில் உத்தரபிரதேச
முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களும்
பங்கேற்றனர். பேரணியில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள்
அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் நட்டா, பாமக தலைவர் அன்புமணி, தமாகா
தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் நடந்து சென்றனர். ஆனால், எல்லா நேரமும் மோடியின்
புகழ் பாடும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்டம் கட்டி விட்டார்கள். அம்புட்டுத்தான் மரியாதை.