Share via:
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒரு ஊழல்வாதியும் வெளியே இருக்க முடியாது,
எல்லோரையும் சிறையில் தள்ளுவோம் என்று தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரத்த குரலில்
பேசி வருகிறார் பிரதமர் மோடி. அதேநேரம், அடுத்து பிரதமராக நரேந்திர மோடி வந்தால், ஆர்.எஸ்.எஸ்.
அமைப்புக்கு தடை விதிக்கப்படும் அல்லது உடைக்கப்படும் என்று உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
செய்திருக்கிறார்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் அவரது பதவியை விரைவில் ஆர்.எஸ்.எஸ்.
பறித்துவிடும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு குண்டு போட்டார். அதன் தாக்கம் நாடு முழுவதும்
எதிரொலிக்கிறது. நரேந்திரமோடி பிரதமர் இல்லை என்றால் யாருக்கு ஓட்டு போடுவது என்று
மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு
இருப்புக்கே மிகப்பெரிய ஆபத்தாக மாறும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
செய்திருக்கிறார்.
மும்பை பிரசாரத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, “சிவசேனாவை எப்படி
பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய முயன்றார்களோ, அதேபோன்ற ஆட்டத்தை எதிர்காலத்தில் மோடி
ஆர்.எஸ்.எஸ். உடன் விளையாடுவார். சர்தார் வல்லபாய் படேல் போல அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை
தடை செய்வார்” என்று வெளிப்படையாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
மோடிக்கு பதிலாக பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை ஆர்.எஸ்.எஸ். பரிசீலனை
அளவில் வைத்தாலே போதும் மொத்த கூடாரத்தையும் கலகலக்க வைக்குற அளவுக்கான அதிகார வெறியுடன்
மோடி தீவிரமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அத்வானியை நகர்த்திய மாதிரி எல்லாம் மோடியை மிக எளிதாக
நகர்த்த முடியாது, ஏனென்றால் மோடிக்கு வேண்டியவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் நிறையவே
இருக்கிறார்கள்.
இது போல் நடக்கும் என்று முன்கூட்டியே அறிந்திருக்கிறார் மோடி.
அதனால்தான் வி.ஹெச்.பி. அமைப்பில் பிரவீன் தொகாடியா வை இருக்கிற இடம் தெரியாம ஆக்கி
அந்த அமைப்பை டம்மியாக மாற்றிவிட்டார். அதேபோல் பஜ்ரங்தள் அமைப்பையும் சிதைத்து விட்டார்.
இப்போது ஆர்.எஸ்.எஸ். மட்டுமே உயிர்ப்புடன் இருக்கிறது. மோடிக்கு
பிரச்னை வருகிறது என்றால் ஏதேனும் காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய முயற்சிப்பார்.
அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை இரண்டாக உடைத்துவிடுவார் என்கிறார்கள்.
ஆட்சிக்கு வரட்டும், அப்புறம் பார்க்கலாம்.