Share via:
ஆம் ஆத்மி கட்சியை அழிப்பதற்காக பிரதமர் மோடி. ‘ஆபரேஷன் துடைப்பம்’
என்ற சதித் திட்டம் தீட்டியிருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருப்பது தேர்தல் பரபரப்பைக்
கிளப்பியிருக்கிறது.
டெல்லியில் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்திய
ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேரணியாக சென்றார். இந்த பேரணியில்
பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘எதிர்காலத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய போட்டியாக ஆம் ஆத்மி
உருவெடுக்கும் என்பதை அந்த கட்சி உணர்ந்துள்ளது. அதன்காரணமாக இப்போதே ஆம் ஆத்மியை முழுமையாக
அழிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அதற்காக ‘ஆபரேஷன் துடைப்பம்’ என்ற சதி திட்டத்தை
பாஜக தொடங்கியுள்ளது.
மக்களவை தேர்தல் முடிந்த பிறகு, ஆம் ஆத்மியின் வங்கி கணக்குகள்
முடக்கப்படும். பிறகு, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.
நாடு சுதந்திரம் அடைந்தது முதல், டெல்லி பின்தங்கிய நிலையில் இருந்தது.
ஆம் ஆத்மி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டது.
ஏழைகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக
மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த மக்கள் நல திட்டங்களை தடுக்கவே ஆம் ஆத்மி
தலைவர்களை அடுத்தடுத்து கைது செய்கின்றனர்.
மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக பொய் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்.
ஆனால் இதுவரை ஒருபைசாகூட பறிமுதல் செய்யவில்லை. என்னை காலிஸ்தான் தீவிரவாதி என்று பிரதமர்
குற்றம்சாட்டுகிறார். அடுத்த10 நாட்களுக்கு மேலும் பல்வேறுபொய்கள், அபத்தமான குற்றச்சாட்டுகளை
அவர் சுமத்துவார்.
சிறையில் 50 நாட்கள் இருந்தேன். அப்போது பகவத் கீதையை 2 முறையும்,
ராமாயணத்தை ஒருமுறையும் படித்தேன்’ என்று கூறியிருக்கிறார்.
அதேநேரம் ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டுக்குப் பின்னேயும் பா.ஜ.க.
உள்ளதாகக் கூறப்படுகிறது.
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இடைக்கால ஜாமீனில் வெளிவந்த கெஜ்ரிவாலைச்
சந்திக்க, கடந்த திங்களன்று அவரது இல்லத்துக்கு ஸ்வாதி மாலிவால் சென்றிருக்கிறார்.
அடுத்த சில மணிநேரங்களில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னைத் தாக்கியதாக
டெல்லி போலீஸில் ஸ்வாதி மாலிவால் புகார் செய்திருக்கிறா
பின்னரே இரண்டு நாள்கள் கழித்து வியாழனன்று ஸ்வாதி மாலிவாலின்
புகாரின்படி போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். அதில், பிபவ் குமார் தனது கன்னத்தில்
ஏழெட்டு முறை பலமாக அறைந்ததாகவும், மாதவிடாய் என்று கூறியபோதும் வயிறு, மார்பு, இடுப்பு
பகுதிகளில் அவர் காலால் எட்டி உதைத்ததாகவும் ஸ்வாதி மாலிவால் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கும் பிபவ் குமார்
ஆஜாரவில்லை
ஸ்வாதி மாலிவாலும், நாடாளுமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருப்பதால்
பாஜக இதை அரசியலாக்க வேண்டாம் என்றும், போலீசில் புகாரளித்திருப்பதால் அவர்கள் நடவடிக்கை
எடுப்பார்கள் என்றும் ட்வீட் செய்திருந்தார். அதேபோல், ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கும்,
கெஜ்ரிவால் இந்த விவகாரத்தை முழுமையாக ஆராய்ந்து பிபவ் குமார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்
என்று தெரிவித்திருந்தார். இப்படியிருக்க, சம்பவம் நடந்த அன்று கெஜ்ரிவால் வீட்டில்
ஸ்வாதி மாலிவால் இருப்பது போன்ற அரைகுறை வீடியோ ஒன்று நேற்று முன்தினம் வெளியானது.
அதைத் தொடர்ந்து, `முழுமையில்லாத வீடியோக்களைப் பரப்பி, இந்தக்
குற்றத்தைச் செய்த பிறகு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று அவர் நினைக்கிறார்’
என ஸ்வாதி மாலிவால் ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில், டெல்லி போலீஸார் பிபவ் குமாரை
கைதுசெய்தனர்.
இவை எல்லாமே தனக்கு கொடுக்கப்படும் அரசியல் நெருக்கடி என்றும்
அதற்கு ஸ்வாதி பணிந்துவிட்டார் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டுகிறார்.