Share via:
சவுக்கு சங்கரை தி.மு.க.வுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுகள் கூற வைத்ததும், அவரை இயக்கியதும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என்பதால் அவர் மீது விசாரணை நடத்தவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் காண்டீபன், அமைச்சர்கள், அதிகாரிகள், நிறுவனத்தினரை மிரட்டி பணம் பறித்த சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோருக்கு உடந்தையாக இருந்த சவுக்கு மீடியா ஆசிரியர் முத்தலீப், லியோ, தமிழ்நாடு ஆளுநரின் ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம் மீதும் அவரை இயக்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் விசாரணை நடத்த வேண்டும். அண்ணாமலையின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.
தற்போது சவுக்கு சங்கரை இரண்டு நாள் காவலில் விசாரிக்க மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி போலீசார் யூடியூபர் சங்கரிடம் விசாரித்து வருகின்றனர்.
விசாரணைக்காக சுமார் 100 கேள்விகள் தயாரித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. விசாரணையின்போது போலீசார், ‘கைது செய்த நாளன்று எதற்காக தேனி மாவட்டத்திற்கு வந்தீர்கள்’ என கேட்டதற்கு, மூணாறு செல்வதற்காக வந்ததாகவும், வரும் வழியில் தேனியில் தங்கியதாகவும் சங்கர் கூறியதாக தெரிகிறது.
‘உங்களுக்கு கஞ்சா பழக்கம் உள்ளதா’ எனக் கேட்டபோது, ‘எனக்கு கஞ்சா உபயோகிக்கும் பழக்கம் இல்லை. என்னுடைய டிரைவர், உதவியாளர் ஏன் அப்படி கூறினர் என்று தெரியவில்லை’ என்று பதில் அளித்துள்ளார்.
காரில் கஞ்சா இருந்தது எப்படி என கேட்டபோது, எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. அமலாக்கத்துறையினருடன் தொடர்பு இருக்கிறதா என கேள்வி கேட்கப்பட்டதாகவும் அதற்கு தமிழக அதிகாரிகள் சிலருடன் நட்பு இருப்பதாகவும், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
‘செலவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது’ என கேட்கப்பட்டதற்கு, அரசியல்வாதிகள், தகவல் தருபவர்கள் தனக்கு உதவி செய்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். மேலும் ஏராளமான கேள்விகளுக்கு தனக்கு தெரியாது என பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது. தேனியில் தொழிலதிபர்கள் யாரிடம் இருந்தும் பணம் பெறப்பட்டுள்ளதா எனக் கேட்கப்பட்டதற்கு அவர் மழுப்பலாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
சங்கர் முழுமையாக பதில் அளிக்காத காரணத்தால் மீண்டும் போலீஸ் விசாரணைக்கு அனுமதி கேட்கப்படும் என்று தெரிகிறது.