Share via:
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள்
நடக்க இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறிவருகிறது. கட்சி மேலிடத்தில் இருந்து
கொடுக்கப்பட்ட பணத்தை நிர்வாகிகளுக்குப் பிரித்துக் கொடுக்காமல் பல பெருந்தலைகள் லவட்டிக்
கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதோடு பா.ஜ.க.வின் ஆதரவுடன் பல மாஜிக்கள் ஒன்று சேர்ந்து எடப்பாடி
பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்ப இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்
சர்ச்சைக்குப் பேர் போன மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ சமூகவலைதளத்தில் ராகுல் காந்தியை
பாராட்டி ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார்.
ஒரு சாதாரண ஹோட்டலில் மக்களோடு மக்களாக ராகுல் காந்தி சாப்பிடுவதையும்
இளம் தலைமுறையினரிடம் சகஜமாக உரையாடும் வீடியோவையும் பகிர்ந்திருக்கும் செல்லூர் ராஜூ,
‘நான் பார்த்து நெகிழ்ந்த இளம் தலைவர்’ என்று குறிப்பும் எழுதியிருந்தார்.
வழக்கம்போல் அட்மின் இப்படி போட்டுவிட்டார் என்று தப்பித்துக்கொள்ளும்
தலைவர்கள் மத்தியில் செல்லூர் ராஜூ, ‘அட்மின் போடவில்லை, நான் தான் போட்டேன். எல்லோரிடமும்
ராகுல் காந்தி எளிமையாக பழகுவதால் அதை பகிர்ந்தேன். காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியை
புகழ்ந்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அ.தி.மு.க.வில் எனக்கு எந்த அதிருப்தியும்
இல்லை’ என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
செல்லூர் ராஜூ தைரியமாக புகழ்ந்திருப்பதை பார்க்கும் அ.தி.மு.க.வினர்,
‘இதுவே ஜெயலலிதா இருந்தால் வேறு ஒரு கட்சித் தலைவரை இப்படி புகழ்ந்திருக்க முடியுமா?
எடப்பாடி பழனிசாமியை கண்டுகொள்ளாமல் வேறு ஒரு தலைவரை புகழ்ந்திருக்கிறார் என்றால் அவர்
காங்கிரஸ் கட்சிக்குத் தாவப் போகிறார்’ என்கிறார்கள்.
இதை உறுதிபடுத்தும் வகையில் காங்கிரஸ் புள்ளிகள் பலரும், ‘சூப்பருண்ணே,
வாழ்த்துக்கள் அண்ணே, வாங்கண்ணே’ என்று அழைப்பு விடுக்கிறார்கள். விரைவில் ராகுல் முன்னிலையில்
செல்லூர் ராஜூ கட்சி மாறினாலும் ஆச்சர்யம் இல்லை.