News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

‘ஒரிசாவை தமிழரால் ஆள முடியுமா? ஒரியா பேசக்கூடியவர்தான் ஆள வேண்டும்’ என்று ஒடிசாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதை அடுத்து இந்தியா முழுக்க வி.கே.பாண்டியன் என்ற பெயர் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

ஆகவே, வி.கே.பாண்டியன் பற்றி தெரிந்துகொள்வோம். வி.கார்த்திகேய பாண்டியன் என்பதன் சுருக்கமே வி.கே.பாண்டியன். இவர் ஒரிசாவின் எதிர்கால முதல்வர் ஆகிவிடுவார் என்பதுதான் அமித்ஷாவின் குற்றச்சாட்டு.

வி.கே.பாண்டியன் மதுரை மேலூருக்கு பக்கத்தில் உள்ள சின்னஞ்சிறு  ஊரான கூத்தப்பன்பட்டியில் பிறந்தவர். 2000 ஆம் ஆண்டில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஒடிசாவில் பணியாற்றத் தொடங்கிய இவர் அந்த மாநிலத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுஜாதாவை மணந்து கொண்டார்.

2002ம் ஆண்டில், அவர் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தரம்கரின் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார். அங்கு விவசாயிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதரவு விலையை செயல்படுத்தி அவர்களின் பாராட்டைப் பெற்றார்.

2004ல் ரூர்கேலாவில் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக இருந்த நிலையில், ரூர்கேலா மேம்பாட்டு முகமையில் மக்கள் பணத்தை முதலீடு செய்து திவாலாகிப் போன போது, பாண்டியன்  பொறுப்பேற்ற ஐந்து மாதங்களில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த மக்களுக்கு பணத்தை திருப்பித் தந்தது பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது.

2005ல், பழங்குடிகள் நிறைந்த மயூர்பஞ்ச் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் ஒற்றைச் சாளர முறையை மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்களை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தியதில் பல்லாண்டுகள் காத்திருந்தோர் 19,000 பேருக்கு ஒரே ஆண்டில் சான்றிதழ் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து முதல்வர் நவீன் பட்நாயக் பாண்டியனை தன் சொந்த மாவட்ட மக்களுக்கு பயன்படுத்த விரும்பி, கன்ஜம் மாவட்ட ஆட்சியராக்கினார். அப்போது நூறு நாள் வேலைத் திட்டத்தை மிக விரிவாக செயல்படுத்தி ஏழை, எளியோரின் வாழ்வாதாரத்திற்கு பேருதவி செய்தார்.

இவரது செயல்பாடுகளை அங்கீக்ரிக்கும் வகையில் முதல்வர் நவீன்பட் நாயக் 2011ம் ஆண்டு பாண்டியனை அவருடைய தனிச் செயலாளராக நியமித்தார். இதையடுத்து சுமார் 12 ஆண்டுகள் அந்த மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அச்சாணியாக இருந்தவர்.

அதன்பிறகு இந்த தேர்தலுக்கு முன்பாக தன்னுடைய ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிஜு ஜனதா தளத்தின் உறுப்பினராக மாறிவிட்டார். இதுவரை பா.ஜ.க. ஆதரவுடன் இருந்த நவீன்பட் நாயக் இப்போது மாநில உரிமைகளை தூக்கிப் பிடிப்பதற்கு பாண்டியனே காரணம் என்று தான் பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்கிறது.

நவீன் பட்நாயக்கிற்கு அரசியல் வாரிசாக பாண்டியன் வந்து நிற்பார் என்பதாலே பா.ஜ.க. விமர்சனம் செய்கிறது. பூரி ஜெகநாதர் கோயில் சாவி தமிழ்நாட்டுக்கு போய்விட்டது, ஒடிசாவிலிருந்து எல்லாவற்றையும் கொள்ளையடித்து தமிழ்நாட்டுக்கு கொண்டு சென்றுவிட்டார் என்கிறார்கள்.

இதற்கு நவீன் பட்நாயக் மற்றும் பாண்டியன் எப்படி பதலடி கொடுக்கப்போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்.  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link