Share via:
மக்கள் நலக் கூட்டணி எங்களை விட அதிக வாக்குகள் பெற்றால் கட்சியைக்
கலைத்துவிடுகிறேன் என்று பொதுவெளியில் சவால் விட்டவர் நாம் தமிழர் சீமான். அந்த தேர்தலில்
மக்கள் நலக்கூட்டணி அதிக வாக்குகள் பெற்றது. அப்போது, ‘கம்யூனிஸ்ட் கட்சி தனித்து நிற்காமல்
விஜயகாந்தை எல்லாம் கூட்டி வந்ததால், அது செல்லாது’ என்று கூறிவிட்டார்.
இந்த நிலையில் மீண்டும் அப்படியொரு சவால் பொதுவெளியில் விட்டிருக்கிறார்
சீமான். சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில்
3வது பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவாகியிருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டும்’ என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த சீமான், ‘’ஆண் மகன் என்றால் தனியாக வர வேண்டும்.
தனியாக போய் சண்டை போட வேண்டும். ஒத்தைக்கு ஒத்தையாக களத்தில் நிக்கணும். அவன் தான்
ஆம்பளை. அவன் தான் வீரன். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு அண்ணாமலையை வரச் சொல்லுங்கள்.
பா.ஜ.க. தனித்து தேர்தலில் போட்டியிடட்டும். நானும் போட்டியிடுகிறேன்.
என்னை விட பாஜக அதிக வாக்குகளை வென்றுவிட்டால், உடனடியாக கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன்.
அண்ணாமலைக்கு மோதி பார்க்க தைரியம் இருக்கிறதா?” என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு பா.ஜ.க.வின் வினோஜ் பி.செல்வம், ‘பா.ஜ.க. போட்டியிட்ட தொகுதிகளில்
நாம் தமிழர் கட்சியை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்றுவிட்டால் கட்சியை கலைத்து விடுவதாக
வாய்ச்சவடால் விட்டிருக்கும் அண்ணன் சீமான் அவர்களே, நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழப்பதையும்,
பாஜக பல தொகுதிகளில் வெற்றி பெறுவதையும் உங்கள் கண் முன்னால் பார்க்க இருக்கிறீர்கள்.
ஆனால், அதற்கெல்லாம் ரோசப்பட்டு கட்சியை கலைத்து விட வேண்டாம். தமிழக அரசியல் களத்தில்
நகைச்சுவை உணர்வு, கதை சொல்லும் பண்பு போன்றவை காணாமல் போய்விடும்’ என்று கிண்டல் செய்தார்.
உடனே இதற்கு பதில் அளித்திருக்கும் இடும்பாவனம் கார்த்தி, ‘யார்
எதைப் பேசுவது எனும் விவஸ்தை இல்லையா சகோதரரே? “நான் மனிதப்பிறவியே இல்லை; பயோலாஜிக்கலாகப்
பிறக்கவில்லை” எனக் கூறிப் பெற்ற தாயையே கொச்சைப்படுத்தும் நரேந்திரமோடியைத் தலைமையேற்றுக்
கொண்டு கதைகளைப் பற்றியும், பொய்களையும் பற்றியும் பேசலாமா?
தமிழ்நாட்டில் ஒரு இடத்தில்கூட பா.ஜ.க. வெற்றிபெறப் போவதில்லை
என்பது அண்ணாமலையே அறிந்த உண்மை. கோவையில் மண்ணைக் கவ்வப்போவதை முன்கூட்டியே அறிந்துதான்,
‘கிணத்தைக் காணோம்’ என வடிவேலு சொன்னக் கதை போல, ஒரு இலட்சம் வாக்காளர்களைக் காணவில்லை
என அள்ளி அளந்துவிட்டார் உங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை.
தோல்வியை முன்கூட்டியே அறிந்து, ரெடிமேட் காரணத்தைத் தயார் செய்ததோடு
நிற்காது, கோவையில் மட்டும் தேர்தல் முடிவுகளை வெளியிட தடைவிதிக்கக்கோரி ஆள் வைத்து
நீதிமன்றத்தில் மனு போட்டார். தன்னைவிட அதிக வாக்குகள் வாங்கிவிடுவோரோ? எனும் பயத்தில்
நயினாரைப் போட்டுக் கொடுத்தார். இப்போது ஒரு இடம்கூட தேறாது என அறிந்து, அடக்கி வாசிக்கிறார்.
பாஜகவைவிட நாம் தமிழர் கட்சி குறைவான வாக்குகளைப் பெற்றுவிட்டால்
கட்சியைக் கலைத்துவிடுகிறேன் என அண்ணன் சீமான் அவர்கள் சவால் விடுத்திருக்கிறார். வெற்றிபெறுவோம்
என நீங்கள் பேசுவது உண்மையென்றால், தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லையென்றால்,
மாநிலத்தலைவர் பொறுப்பைவிட்டு விலகுகிறேன் என உங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பேசச்
சொல்லுங்கள்.. பார்ப்போம்.. அதைச் சொல்லத் துணிவு இருக்கா? திராணி இருக்கா?’’ என்று
கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இரண்டு பக்கத்தினரும் அடித்துக்கொண்டு உருள்வதை சமூகதளவாசிகள்
ஆர்வமாக வேடிக்கை பார்க்கிறார்கள்.