Share via:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேட்பாளராக நிற்பதற்கு ராகுல் காந்திக்குத்
தைரியம் இல்லை என்று பிரதமர் மோடி பேசியதற்கு பதிலடி கொடுப்பதற்கு காங்கிரஸ் மேலிடம்
முடிவு செய்திருக்கிறது. அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில்
ராகுல் காந்தியும், ரேபரேலியில் பிரியங்கா வத்ராவும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய மாநிலமாக இருந்தது உபி. இதில் தற்போது
அவர்களுக்கு மிஞ்சியிருப்பது ரேபரேலி தொகுதி மட்டுமே. இத்துடன் கைவசம் இருந்த அமேதியை
கடந்த 2019 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி பறிகொடுத்தார். இவரை 2014 மக்களவைத் தேர்தல்
முதல் தொடர்ந்து எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி
2019ல் வெற்றி பெற்றார். அமேதியில் ராகுல் 2004 முதல் எம்.பியாக உள்ளார். இதை எதிர்பார்த்த
ராகுல் 2019 இல் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டிருந்தார்..
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதியுடன் இணைந்து போட்டியிடும் 17 தொகுதிகளில்
அமேதி, ரேபரேலியும் இடம் பெற்றுள்ளன. அமேதியில் ராகுலின் மைத்துனரும், பிரியங்காவின்
கணவருமான தொழிலதிபர் ராபர்ட் வத்ரா போட்டியிடுவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக அமேதியில் ராகுல் இருப்பார் என்ற தகவல் மீண்டும்
உறுதியாகிறது.
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, “ஏப்ரல்
26 ஆம் தேதிக்கு பின் ராகுல் அமேதி வருவார். பொதுமக்களை பல்வேறு சமூகங்களின் பெயரில்
பிரிப்பதுடன் ஒவ்வொரு கோயிலுக்கும் செல்வார். ராமர் கோயில் திறப்பிற்கான அழைப்பை அலட்சியம்
செய்தவர்கள் மீது ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமேதியில் ராகுலின் விருந்தினர் மாளிகை சுண்ணாம்பு அடித்து
தயாராகி வருகிறது. இங்கு காங்கிரஸின் பல இளம் தலைவர்கள் விஜயம் செய்தி அமேதியின் இளைஞர்களை
சந்தித்து பேசத் துவங்கி உள்ளனர். மேதியின் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரப் பொறுப்பை
அக்கட்சியின் ராம்பூர் காஸ் சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏவான ஆராதனா மிஸ்ரா ஏற்றுள்ளார்.
கிராமசபை மற்றும் பிளாக்குகள் அளவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆக, உத்தரப்பிரதேசம் சூடு பிடிக்கிறது.