News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழகத்தில் அ.தி.முக.வுக்கு ஓரளவு நம்பிக்கை தரும் தொகுதிகளில் ஈரோடு முதலிடத்தில் இருக்கிறது. ஏனென்றால், பொதுவாகவே இந்த தொகுதி அ.தி.மு.க.வுக்கு ஆதரவானது. எனவே பெரும் செல்வம் வைத்திருக்கும் ஆற்றல் அசோக்குமாரை அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது.

அதேநேரம், பா.ஜ.க. சார்பில் டம்மி வேட்பாளராக கூட்டணிக் கட்சியான தமிழ் மாநிலக் காங்கிரஸில் விஜயகுமார் நிற்கிறார். ஆக, எதிர்த்து கடுமையாக களமாடுவது உதயநிதியின் நம்பிக்கை நட்சத்திரமான கே.இ.பிரகாஷ்.

ஈரோடு இளைஞரணி மாவட்ட அமைப்பாளராகப் பணியாற்றிய பிரகாஷ் மீது உதயநிதியின் பார்வை பட்டதுமே அவர் இளைஞர் அணியின் மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் இளைஞர் அணி சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரே வேட்பாளர் பிரகாஷ் மட்டுமே. எனவே இவரை ஜெயிக்க வைக்கவேண்டிய பொறுப்பும் அவசியமும் அமைச்சர்கள் முத்துச்சாமிக்கும் சாமிநாதனுக்கும் உள்ளதால் கடுமையாக வேலை செய்கிறார்கள்.  

ஈரோடு தொகுதி முன்பு திருச்செங்கோடாக இருந்தபோது, அ.தி.மு.க.வின் எம்.பி.யாக இருந்த கே.எஸ்.சவுந்திரத்தின் மகனே ஆற்றல் அசோக்குமார். அதேபோல் அசோக்குமாரின் மாமியார் மொடக்குறிச்சி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரஸ்வதி. எனவே இவருக்கு பா.ஜ.க. மறைமுகமாக வேலை பார்ப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இந்த தொகுதியைக் குறிவைத்து கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மருத்துவமுகாம், கோயில் புனரமைப்பு, 10 ரூபாய்க்கு உணவு போன்ற பல பணிகள் செய்துவருகிறார்.

முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கே.வி.ராமலிங்கம், அமைச்சர் தங்கமணி போன்றவர்கள் அசோக்குமாருக்கு ஆதரவாக நிற்கிறார்கள். தோல்வி பயத்தில் யாரும் சீட்டு கேட்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

 

அ.தி.மு.க.வின் ஆற்றல் அசோக்குமார் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எம்.பி. சீட் வாங்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் நிறையவே நலத்திட்ட உதவிகள் செய்துவந்தார். பா.ஜ.க.வில் வாய்ப்பு இல்லை என்று தெரியவந்ததும் அ.தி.மு.க.வுக்கு வந்திருக்கிறார். மக்கள் அறிமுகம் உள்ளது. பணபலம் உள்ளது. எடப்பாடியின் முழு ஆதரவும் மாஜி அமைச்சர் தங்கமணியின் பக்கபலம் இருந்தாலும் தொண்டர்களிடம் அத்தனை எழுச்சி இல்லை. ஆனால், பணம் இறக்கப்பட்டதும் அ.தி.மு.க.வினர் கூடுதல் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் விடியல் சேகர் அல்லது யுவராஜா நின்றிருந்தால் கணிசமான வாக்குகள் வாங்கியிருக்கலாம். விஜயகுமாருக்கு செல்வாக்கு குறைவு என்பதால் இவர் போட்டியிலே இல்லை.

ஈரோடு தொகுதியில் குமாரபாளையம் (மாஜி அமைச்சர் தங்கமணி) ஈரோடு கிழக்கு – இ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஈரோடு மேற்கு – அமைச்சர் முத்துசாமி, மொடக்குறிச்சி – பா.ஜக. சரஸ்வதி, தாராபுரம் என்.கயல்விழி, காங்கேயம் – அமைச்சர் சாமிநாதன் இரண்டு தொகுதியில் மட்டுமே எதிர்க்கட்சியினர் என்றாலும் நல்ல போட்டி தரக்கூடியவர்கள்.

இந்த தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர்கள், வன்னியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமாகவும் நாயக்கர், செட்டியார், முதலியார் வாக்குகள் கணிசமான அளவிலும் உள்ளனர்.

திருச்செங்கோடு தொகுதியில் இருந்து கடந்த 2008ம் ஆண்டு பிரிக்கப்பட்டு தனி மக்களைவை தொகுதியாக ஈரோடு அறிவிக்கப்பட்டு இதுவரை 3 தேர்தல்களே நடந்துள்ளன. இரண்டு முறை கணேசமூர்த்தியும் ஒரு முறை அ.தி.மு.க.வும் வென்றுள்ளது. கணேசமூர்த்தியின் மரணம் தி.மு.க.வுக்கு ஒரு பின்னடைவாக இருக்கிறது.

இந்த தொகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களும் தொழிலாளர்களும் அதிகம். பஞ்சு விலை, நெசவுக் கூலி நீண்ட கால பிரச்னைகளாக உள்ளன.  மஞ்சள், தென்னை, முருங்கை போன்ற விளைப்பொருட்களின் மதிப்புக்கூட்டுப் பொருள் உற்பத்திக்கு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை. பாசன நீர் முறைப்படி அனைவருக்கும் போய் சேர்வதில்லை என்ற பிரச்னையும் குடிநீர் பிரச்னையும் அவ்வப்போது ஏற்படுகிறது.

இத்தனை பிரச்னைகள் இருந்தாலும் கடுமையாக போட்டி நிலவினாலும் கூட்டணி ஆதரவுடன் இப்போதைக்கு பிரகாஷே வெற்றிக் கோட்டுக்கு அருகில் நிற்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link