Share via:
கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக போடக்கூடாது என்று கே.ஆர்.ராமசாமி,
சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் டெல்லிக்குப் படையெடுத்தும்
பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். மீண்டும் செவச்சீமான் கார்த்தி சிதம்பரமே நிற்கிறார்.
அ.தி.மு.க.வின் சார்பில் நிற்கும் சேவியர் தாஸ் தேர்தல் அரசியலுக்கு
ரொம்பவே புதுசு. அவருக்கு ஜாதி வாக்குகளும் இரட்டை இலையும் மட்டுமே சாதகம். தாமரை சின்னத்தில்
போட்டியிடுகிறார் தேவநாதன் யாதவ். இந்த நேரத்தில் இவர் மீது திடீரென எழுந்திருக்கும்
இந்து சிட்பண்ட் மோசடி குற்றச்சாட்டு கடுமையான பாதிப்பை உண்டாக்குகிறது.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் முக்குலத்தோர், ஆதிதிராவிடர்,
யாதவர், நகரத்தார், வல்லம்பர், முத்தரையர், நாடார், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பரவலாக
உள்ளனர். பா.ஜ.க., அ.ம.மு.க.வுக்கு ஓரளவுக்கு வாக்கு வங்கி உள்ளது.
கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தி.மு.க.வினரிடம்
முழுமையாக தஞ்சம் அடைந்துவிட்டார். ஒரு தி.மு.க. தொண்டனை விட அதிகமாக ஸ்டாலினையும்
தி.மு.க. ஆட்சியையும் பாராட்டிப் பேசுகிறார். பா.ஜ.க.வை அடித்து துவைத்து எடுக்கிறார்.
ஆகவே, இப்போது தி.மு.க.வினர் இப்போது கார்த்தி சிதம்பரத்துக்கு தீவிரமாக வேலை செய்யத்
தொடங்கிவிட்டனர்.
கார்த்தி சிதம்பரமும் ஒவ்வொரு பிரச்சார முனைக் கூட்டத்திலும் திமுக
அரசின் மக்கள் நலதிட்டங்களை வாக்காளர்களுக்கு புரியும் வகையில் தி.மு.க. நிர்வாகிகளை
விட எளிமையாக வலிமையாக பிரச்சாரம் செய்கிறார். 2014 தேர்தலில் தனித்து நின்று 25 சதவிகித
வாக்குகளை தி.மு.க.வும், 10 சதவிகித வாக்குகளை காங்கிரஸ் கட்சியும் இங்கு பெற்றன. கடந்த
2019 தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மட்டுமே 52% வாக்குகள்
பெற்றுள்ளார்.
கடந்த தேர்தலில் ஹெச். ராஜா 20 சதவிகித வாக்குகளையும் அ.ம.மு.க.
12 சதவிகித வாக்குகளும் பெற்றன. ஆகவே, இந்த தேர்தலில் கார்த்தி சிதம்பரத்துக்கு சரியான
போட்டி இல்லாத காரணத்தால் எளிதாக எம்.பி. ஆகிறார் கார்த்தி. இந்த தொகுதியில் நாம் தமிழர்
கட்சியினர் தீவிரமாக களமாடுவதால் தேவநாதன் யாதவ் நான்காவது இடத்துக்குப் போகிறார் என்பதே
இன்றைய நிலவரம்.