Share via:
தலையாட்டி பொம்மை, எடுப்பார் கைப்பிள்ளை, அரசியல் ஜோக்கர் என்ற
பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காரர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு
பா.ஜ.க. பேச்சைக் கேட்டு சசிகலாவை முறைத்துக்கொண்டதால் பதவி பறி போனது.
அதன்பிறகு தர்மயுத்தம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியை பகைத்துக்கொண்டார்.
பின்னர் பா.ஜ.க. பஞ்சாயத்தில் கட்சிக்குள் புகுந்துவிட்டாலும், அ.தி.மு.க.வில் நிலைத்துநிற்க
முடியாமல் வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பிறகு தினகரன் ஒரு கட்சியைத் தொடங்கியது
போல் எதுவும் செய்ய முடியாமல் அ.தி.மு.க.வை மீட்பேன் என்று முயற்சி செய்து, அத்தனையும்
தோல்வியில் முடிந்துபோனது.
ஜெயலலிதா, சசிகலாவின் விசுவாசியாக இருந்தவர் இப்போது மோடியின்
விசுவாசியாக இருக்கிறார் என்பது மட்டுமே உண்மை. மற்றபடி அவரது செல்வாக்கிலும் அரசியலிலும்
எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், பிரதமர் மோடி போட்டியிட விரும்பிய தொகுதியில்
நான் பெருமையுடன் போட்டியிடுகிறேன் என்று சுயேட்சை வேட்பாளராக பலாப்பழ சின்னத்தில்
நிற்கிறார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள் இருக்கும் ராமநாதபுரம், பரமக்குடி
(தனி), முதுகுளத்தூர், திருவாடானை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்சுழி, புதுக்கோட்டை
மாவட்டத்தைச் சேர்ந்த அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தி.முக. கூட்டணிகளே
பலம் காட்டுகின்றன.
இஸ்லாமியர், முக்குலத்தோர், மீனவர்கள் நிரம்பிய தொகுதி. கடந்த
2019 தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்
கனி 4.69 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் அ.தி.மு.க. கூட்டணியின் பா.ஜ.க.
வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட 1.27 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்றார். அப்போது
அ.ம.மு.க. வேட்பாளரும் முன்னாள் அமைச்சர் நடராஜனின் மகனுமான ஆனந்த் 1.41 லட்சம் வாக்குகள்
பெற்றார். இந்த வாக்குகளையும் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதையும் நம்பியே
ஓ.பன்னீர்செல்வம் இங்கு நிற்கிறார்.
தி.மு.க. கூட்டணியில் தற்போதைய எம்பியான நவாஸ் கனி ஏணி சின்னத்திலும்
அ.தி.மு.க .வேட்பாளர் ஜெயபெருமாளும் ஓ.பன்னீர்செல்வத்துக்குப் போட்டியாக மேலும் நான்கு
ஓ.பன்னீர்செல்வமும் தேர்தலில் நிற்கிறார்கள்.
நவாஸ் கனி தொகுதிக்கு பெரிய அளவில் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை
என்றாலும் சமுதாய வாக்குகளும் கூட்டணிக் கட்சிகளும் முழு ஆதரவு கொடுக்கின்றன. எனவே,
தேர்தல் வேலை சுணக்கமில்லாமல் நடக்கிறது.
நவாஸ்கனியை தோற்கடிக்க வேண்டும் என்பதை விட பன்னீர்செல்வத்துக்கு
ஓட்டு வந்துவிடக் கூடாது என்பதே எடப்பாடி பழனிசாமியின் கவலையாக இருக்கிறது. ஆனால்,
ஜெயபெருமாள் அத்தனை தீவிரம் காட்டுவதாகத் தெரியவில்லை. இரட்டை இலை சின்னம் மட்டுமே
இவருக்குக் கை கொடுக்கிறது.
பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க.வினரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள்
என்பது டுவிஸ்ட். பா.ஜ.க.வின் முழு ஆதரவு, நிறைய பணம் இருப்பதால் தைரியமாக களமாடுகிறார்.
தன்னை நிரூபிப்பதற்கு நல்ல வாக்குகள் வாங்க வேண்டும் என்பதில் பன்னீர் உறுதியாக இருக்கிறார்.
எனவே, இங்கு இரண்டாம் இடத்துக்கு வருவதற்கே பன்னீருக்கு மூச்சு திணறுகிறது.
பரிதாபத்தில் பன்னீர்.