Share via:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரசாரம் செய்வதற்காக ஏப்ரல் 12ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
2024 பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 வார காலமே உள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகள் முழு வேகத்துடன், வேட்பாளர்களை முன்னிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும் நட்சத்திர பேச்சாளர்களையும் நியமித்து மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் வேட்பாளர்கள் டீக்கடையில் டீ போட்டு தருவது, டிபன் கடையில் தோசை சுட்டு தருவது, கோவில்களில் துப்புரவு பணி செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. அந்த வகையில் வருகிற 12ம் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்திற்கு வர உள்ளதாக கட்சி வட்டாரத்தில் செய்தி கசிந்துள்ளது.
அன்று ஒரே நாளில் 2 இடங்களில் அவர் துரிதமாக பிரசாரம் செய்யும் வகையில் பயணத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர், தூத்துக்குடி, தென்காசி தி.மு.க. வேட்பாளர்கள், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்டோரை ஆதரித்து மக்களிடம் ராகுல்காந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார் என்றும், நெல்லையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
அதனைதொடர்ந்து கோவையில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்காக ராகுல்காந்தி ஆதரவு திரட்ட உள்ளார். பின்னர் தமிழகத்தில் இருந்து அவர் போட்டியிடும் கேரள மாநிலம் வயநாட்டிற்கு சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.