Share via:
மத்த தொகுதிகளில் எப்படியோ கோவையில் அண்ணாமலை கண்டிப்பாக வெற்றி
அடைந்துவிடுவார், உளவுத் துறை கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில்தான் அவர் கோவையில் நிற்கிறார்
என்று பா.ஜ.க.வினர் பில்டர் கொடுத்துவரும் நிலையில் கோவை தொகுதியில் ரவுண்ட் அடித்தோம்.
கோவையில் தி.மு.க. சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார்,
அ.தி.மு.க.வின் ஐ.டி. விங் சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ.க.வின் அண்ணாமலை ஆகியோர் நிற்கிறார்கள்.
தமிழகத்திலேயே அதிக பணம் உள்ள வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்.
இப்போது இவருக்கு வேலுமணி வாக்கு கேட்டு வந்தாலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ
வாய்ப்பு கொடுக்காமல் தடுத்து நிறுத்தியது அவர் தான். மேலும் அவர் ஓ.பி.எஸ். அணிக்கு
சென்று திரும்பியவர். ஐ.டி. விங்க் மூலம் எடப்பாடியின் ஆதரவை பெற்றவர். அதேநேரம் நிறைய
பணம் வைத்திருப்பதால் தனக்கு போட்டியாக சிங்கை வந்துவிடலாம் என்பதால் அடக்கியே வாசிக்கிறார்
வேலுமணி. அதேநேரம், இவர் நாயுடு சமூகம் என்பதால் கொங்கு பகுதியில் செல்வாக்கு குறைவு.
ஓரளவுக்கு இங்கு பா.ஜ.க.வுக்கு ஆதரவு வாக்குகள் இருக்கிறது என்பதை
நம்பியே அண்ணாமலை நிற்கிறார். அதேநேரம் அவருக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் கூட சீரியஸாக
வாக்கு கேட்பதாக இல்லை. அண்ணாமலையும் முழு நேரமும் கோவையில் தங்காமல் மற்ற வேட்பாளர்களுக்கு
பிரசாரம் செய்துவருகிறார்.
அதேநேரம், தி.மு.க. மிகத் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. தொழிலாளர்கள்
நிறைந்த தொகுதி என்பதால் தி.மு.க. கூட்டணிக் கட்சியிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிரமாக
உழைத்து வருகிறார்கள். இப்போது செந்தில் பாலாஜியின் கரூர் டீம் களம் இறங்கியிருப்பதால்
தி.மு.க.வினர் படு வேகமெடுக்கிறார்கள்.
கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய 6 தொகுதிகளிலும்
அ.தி.மு.க. வெற்றி பெற்றதால் தி.மு.க. இங்கு செந்தில் பாலாஜியை களம் இறக்கியது.
தொகுதியை முழுக்க அவர் கண்ட்ரோல் எடுத்துக்க்கொண்டு தி.மு.க.வுக்கு
தீவிரமாக உழைக்கக்கூடிய புதிய நிர்வாகிகளை நியமனம் செய்திருக்கிறார். அதோடு இப்போது
அவரது ஆதரவாளரே வேட்பாளர் என்பதால் செந்தில் பாலாஜியின் பெயரைக் காப்பாற்றுவதற்காக
கடுமையாக உழைக்கவும், பணம் செலவழிக்கவும் செய்கிறார்கள்.
இந்த தொகுதியில் ஜவுளிப் பூங்கா அமையவில்லை, மின்சார சலுகை தொழிற்சாலைகளுக்குக்
கிடைக்கவில்லை, ஜி.எஸ்.டி. வரி குறைப்புக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்றெல்லாம்
புகார்கள் இருந்தாலும் எதுவும் தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றே சொல்ல
வேண்டும்.
இப்போது கோவையில் தீவிரமாக பரப்புரை செய்துவரும் அண்ணாமலை, ‘கோயம்புத்தூரின்
கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர், கோவையில் வளர்ச்சிப் பணிகளைச் செய்யத் தவறிவிட்டார்.
எளிமையாக இருப்பது வேறு. மக்களுக்கான பணிகளை நிறைவேற்றாமல் இருப்பது வேறு. கடந்த பத்து
ஆண்டுகளாக, பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி, கோவையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கியும்,
மத்திய அரசின் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தாத பாராளுமன்ற உறுப்பினரால், கோவையின்
வளர்ச்சி தேங்கி நிற்கிறது. நகரெங்கும் குண்டும் குழியுமான சாலைகள், தண்ணீர்ப் பிரச்சினை
என மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். எல்லாவற்றையும் மோடி தீர்த்து வைப்பார்’
என்று பேசி வருகிறார்.
ஆக, இப்போது கோவை தேர்தல்
களம் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையிலாகத்தான் இருக்கிறதே தவிர, பா.ஜ.க.
களத்தில் இருப்பதாகவே தெரியவில்லை. ஆகவே, அண்ணாமலை டெபாசிட் வாங்கினாலே பெரிது என்பதுதான்
இன்றைய கள நிலவரம்