Share via:
சீட் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி பா.ஜ.க.வின் மாநில
பட்டியலின பிரிவு தலைவராக பதவி வகித்து வந்த தடா பெரியசாமி, இன்று எடப்பாடி பழனிசாமியை
சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கடந்த 1992ம் ஆண்டு அரியலூர் மருதையாற்று பாலம் குண்டு வெடிப்பு
வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியசாமி கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டார். பின்னர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இவரை நிரபராதி
என தீர்ப்பளித்து விடுதலை செய்தது.
இதைத் தொடர்ந்த கடந்த 1990ம் ஆண்டு தொல்.திருமாவளவனுடன் இணைந்து
விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடங்கினார். 2001ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி
கட்சியான தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் கருத்து வேறுபாடால்
அக்கட்சியில் இருந்து விலகி 2004ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். 2004ம் ஆண்டு சிதம்பரம்
மக்களவைத் தொகுதியிலும், 2006ம் ஆண்டு வரகூர் சட்டப்பேரவை தொகுதியிலும் போட்டியிட்டு
தோல்வியடைந்தார். தற்போது பா.ஜ.க.வின் மாநில பட்டியலின பிரிவு தலைவராக பதவி வகித்து
வந்தார்.
நடைபெறும் மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட
அவர் வாய்ப்பு கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பாஜகவின்
தலைமை மீது கடந்த சில நாட்களாகவே பெரியசாமி அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து அவர், ‘இந்த தொகுதிக்காக தீவிரமாக பாடுபட்டு வருகிறேன்
என்பது அண்ணாமலைக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கார்த்தியாயினி திடீரென கேசவ விநாயகம்
மூலம் காய் நகர்த்தி சீட் வாங்கிவிட்டார். இத்தனை நாட்கள் கட்சிக்காக பாடுபட்ட எனக்கே
இந்த நிலை வந்துவிட்டது. அண்ணாமலை, முருகன், கேசவவிநாயகம் ஆகிய மூவரும் கட்சியை அழித்துவிடுவார்கள்’
என்று ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.
அதுசரி, அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வும் பா.ஜக.வும் கூட்டணி வைச்சிக்கிட்டா
என்ன செய்வாராம் தடா பெரியசாமி.