Share via:
தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்வதும், படகுகளையும் வலைகளையும் சேதப்படுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது. மீன் பிடிக்க உரிமையுள்ள இடங்களில் மட்டுமே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தாலும் இலங்கை ராணுவம் தொடர்ச்சியாக அத்துமீறுகிறது.
சமீபத்தில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர் வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படை அதிகாரிகள் மீனவர்களை கைது செய்து காங்கேசன் துறை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
இதற்கு முன்பாக கடந்த 10-ம் தேதி இதேபோல 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவ மக்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் பதற்றம் நிலவியது. இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே இப்போது மீண்டும் 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அறிக்கை விட்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீனவர்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
“இலங்கை கடற்படையின் அத்துமீறல் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலை நீடித்து வருகிறது. மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, அவர்கள் வாழ்வாதாரங்களை சேதப்படுத்துவது, படகுகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விடுவது என தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்கள்.
மத்திய மாநில அரசுகள் இதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நியாயமில்லாதது. அப்பாவி மீனவர்கள் கைது செய்யப்படுவதை சகித்துக்கொண்டு இருக்க முடியாது. இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் இணைந்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றமும் இதைத்தான் அறிவுறுத்தி இருக்கிறது. இதையே பாட்டாளி மக்கள் கட்சியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது” என்றார்.