Share via:
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தேதி நாளை அறிவிக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டை எப்படியாவது பா.ஜ.க. வசம் கொண்டுவருவதற்காக பிரதமர் மோடி தொடர்ச்சியாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். திருப்பூர், நெல்லை, சென்னை போன்ற மாவட்டங்களில் நடந்த கூட்டங்களில் இதற்கு முன்பு கலந்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது பாரதீய ஜனதா கட்சி. அதிலும் கலந்துகொண்டு பேசினார் பிரதமர் மோடி. முன்னதாக கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
“மோடி மீண்டும் 3-வது முறையாக பிரதமர் ஆவது உறுதி. குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது. இந்தியாவை முன்னேற்றுவதற்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுகளோடு பிரதமர் இங்கு வந்திருக்கிறார். 400 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்.
குமரிக்கு வந்து பாறை மீது அமர்ந்து தவம் செய்துதான் நரேந்திரன் விவேகானந்தராக மாறினார். அதுபோலவே தற்போது குமரி வந்திருக்கும் மோடி ஞானியாக மாறி இருக்கிறார். 140 கோடி இந்திய மக்களின் குருவாக மோடி இருக்கிறார்” என்று அந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசி இருக்கிறார்.