Share via:
பாலியல் புகார்கள் அரசியல் தலைவர்கள் மீது அவ்வப்போது எழுவதும்,
அப்படியே அடங்கிப்போவதும் உண்டு. இப்போது கர்நாடக முன்னாள் முதல்வரும் பா.ஜ.க. முக்கியப்
புள்ளியுமான எடியூரப்பா மீது எழுந்திருக்கும் புகாரும் அடுத்து எடுக்கப்பட்டுள்ள போக்சோ
நடவடிக்கையும் நாட்டையே அதிர வைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 2ம் தேதி கல்வி உதவித் தொகை தொடர்பாக தாயுடன் எடியூரப்பா
வீட்டிற்கு சென்ற ஒரு 17 வயது மாணவியிடம் கூடுதல் தகவல் கேட்க வேண்டும் என்று தனி அறைக்குள்
அழைத்து சென்றுள்ளார். அந்த அறையில் வைத்து பாலியல் சில்மிஷம் செய்திருக்கிறார். இது
குறித்து அந்த சிறுமி காவல் நிலையத்தில் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட
சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ்
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போஸ்கோ சட்டத்தின் பிரிவு 8 மற்றும் இந்திய தண்டனைச்
சட்டம் பிரிவு 354 A ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள்
உறுதிப்படுத்தியுள்ளன.
பாலியல்
புகாரில் பாஜக மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது போக்சோ
சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இது
அரசியல் ரீதியில் பொய்யான குற்றச்சாட்டு என்று எடியூரப்பா கூறிவருகிறார்.