Share via:
தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் வலுவாக காலூன்ற பாரதீய ஜனதா கட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் தமிழக மக்களை தங்கள் வசம் ஈர்ப்பதற்காக கவனமாக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.
கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் மற்ற கட்சியில் உள்ள ஆட்களை தங்கள் வசம் கொண்டு வரும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு விசிட் அடித்துக்கொண்டிருக்கிறார்.
அதிமுக கட்சியுடன் கூட்டணி முறிந்த நிலையில் அந்த கட்சியின் தொண்டர்களை பாரதீய ஜனதா கட்சி நோக்கி இழுக்கும் தீவிரத்தில் இருக்கிறார் பிரதமர் மோடி. இதன் வெளிப்பாடாக தற்போது தமிழ்நாட்டில் எங்கு பேசினாலும் அதிமுக-வின் முன்னாள் தலைவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகழ் பாடிவருகிறார்.
“எம்.ஜி.ஆர்-க்கு பிறகு தமிழ்நாட்டில் நல்லாட்சியை வழங்கியவர் ஜெயலலிதா” என திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இதை கேட்டு ஷாக்கான அதிமுக கட்சியின் தொண்டர்களும் “என்னடா காத்து இந்த பக்கம் அடிக்குது” என்று ஆச்சரியப்பட்டுப்போனார்கள்.
இந்த நிலையில்தான் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “மோடி வித்தைகள் தமிழ்நாட்டில் எடுபடாது” என்று கூறியுள்ளார். “எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் ஆட்சியைப் பாராட்டி பேசுவது, அதிமுக கட்சியின் நிர்வாகிகளை தங்கள் வசம் இழுப்பது, கூட்டணி அமைக்க முயற்சிப்பது, அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து கூட்டம் போட்டு பேசுவது என்று மோடி காட்டும் வித்தைகள் எதுவும் இங்கே எடுபடாது. இந்த தேர்தலில் மட்டும் அல்ல. 2026-ல் நடைபெறப்போகும் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது” என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.