Share via:
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறையாக தேர்தல்
பத்திரங்களை பா.ஜ.க. அரசு 2017ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்த தேர்தல் பத்திரத்தை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும்
அல்லது நிறுவனமும் ஸ்டேட் வங்கியின் கிளைகளில்
வாங்கலாம். அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது அடையாளத்தை வெளியிடாமல்
நன்கொடையாக அளிக்கலாம்.
கடந்த 2017ம் ஆண்டு பா.ஜ.க. அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திர திட்டம்
2018 ஜனவரி 29ம் தேதி முதல் சட்டப்பூர்வமாக
அமலுக்கு வந்தது.
இந்தத் திட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான
பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும். கேஒய்சி விவரங்கள் உள்ள வங்கிக் கணக்கு
வைத்திருக்கும் எந்த நன்கொடையாளரும் இவற்றை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின்
பெயர் இடம்பெறத் தேவையில்லை.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து
ரூ.1,000 முதல் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரை எந்த மதிப்பிலான
தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம். தேர்தல் பத்திரங்களின் ஆயுள் 15 நாட்கள் மட்டுமே.
அவற்றை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு
நன்கொடை அளிக்க மட்டுமே பயன்படுத்த முடியும்.
மக்களவை அல்லது சட்டப் பேரவைக்கு கடந்த பொதுத் தேர்தலில் பதிவான
வாக்குகளில் குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே
தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க முடியும். இத்திட்டத்தின் கீழ் ஜனவரி, ஏப்ரல்,
ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் 10 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கலாம்.
லோக்சபா தேர்தல் நடக்கக்கூடிய ஆண்டில் கூடுதலாக 30 நாட்களுக்கும் இவை வெளியிடப்படலாம்.
இந்த சூழலில் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டும்
நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து
கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின்
விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதில்
ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த சூழலில்
லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக
உள்ளது. மொத்தமாக 22 நிறுவனங்கள் ரூ.100 கோடிக்கு மேலாக தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளன.
தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்ற கட்சிகளின் பட்டியலில், பா.ஜ.க.,
காங்கிரஸ், தி.மு.க, திருணாமூல் காங்கிரஸ், அ.தி.மு.க., சிவசேனா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்,
ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி போன்ற முக்கியக் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகம் நிதி பெற்ற அரசியல் கட்சியாக பா.ஜ.க. உள்ளது.
இதில் பா.ஜ.க.வுக்கு மட்டும் அதிக தொகை வழங்கப்பட்டது குறித்து
கேள்வி எழுப்புபவர்களுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே
இருக்கும் தி.மு.க.வுக்கு 1230 கோடி ரூபாய் நிதி கிடைத்திருக்கிறது. 28 மாநிலங்களில்
செல்வாக்குடன் இருக்கும் பா.ஜ.க.வுக்கு கிடைத்திருப்பது கொஞ்சம் தான் என்று வாதத்தை
முன்வைக்கிறார்கள். அதோடு, இந்த விவகாரத்தை திசை திருப்பவே பெட்ரோல், டீசல் விலையை
இரவோடு இரவாக 2 ரூபாய் குறைத்திருக்கிறார்கள்.
இந்த தேர்தல் நிதியை கட்சிகளிடம் இருந்து கைப்பற்றி மக்களிடம்
கொடுக்க வேண்டும் ஒட்டுமொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்பும். இதை நீதிமன்றம் செய்ய
வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்புகிறார்கள்.