Share via:
அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து
கொள்ள உரிமை இல்லை என்றும் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்து விசாரிக்க நீதிமன்றத்திற்கு
அவசியம் இல்லை என்றெல்லாம் மோடி அரசு தேர்தல் பத்திரங்கள் விசாரணையை முடக்கப் பார்த்தது.
ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் உறுதியாக இருந்த காரணத்தால்
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்த விவகாரத்தில் பா.ஜ.க.வின்
விஞ்ஞான ரீதியிலான வசூல் வேட்டை அம்பலத்துக்கு வந்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த
நிறுவனங்களில் முதலிடத்தில் இருப்பது ஃப்யூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் என்ற
நிறுவனம் (Future Gaming and Hotel Services) ஆகும். இந்த நிறுவனம் தமிழ்நாட்டை சேர்ந்த
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமானது என சொல்லப்படுகிறது. இந்த நிறுவனம் 1,368
கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
லாட்டரி மார்ட்டின் மீது டிசம்பர் 23, 2021 அன்று அமலாக்கத்துறை
ரெய்டு நடத்துகிறது. அடுத்த 12 நாட்களில் அதாவது 2022, ஜனவரி 5ம் தேதி 300 கோடி ரூபாய்க்கும்
மேல் மார்ட்டின் நன்கொடை அளிக்கிறார்.
மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம்
சார்பில் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. கடந்த 2019 முதல் கடந்த
ஜனவரி மாதம் வரையில் பல்வேறு காலகட்டங்களில் இதனை அந்நிறுவனம் வாங்கியுள்ளது.
ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மேகா இன்ஜினியரிங்
அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் 966 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை
வாங்கி இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு 2019ம் ஆண்டு
வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இதையடுத்தே நன்கொடை கொடுக்கப்பட்டுள்ளது.
ஹெட்டிரா மருந்து நிறுவனங்களில் தொடர்ந்து 8 முறை ரெய்டு நடத்தப்படுகிறது.
இதையடுத்து அந்த நிறுவனமும் தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க.வுக்கு நிதி வழங்கியிருக்கிறது..
இப்படி நிறுவனங்களுக்கு ரெய்டு அனுப்பி, மிரட்டியே பணம் வசூல் செய்திருப்பதாக அரசியல்
கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
சட்டபூர்வமாக 10 ஆண்டுகளில் 11500 கோடி ரூபாய் நிதியை பா.ஜ.க.
திரட்டியிருக்கிறது என்றால், தலைவர்கள் கறுப்பு பணமாக எத்தனை கோடி ரூபாய் வசூல் செய்திருப்பார்கள்
என்று கேள்வி எழுப்புகிறார்கள்.