Share via:
மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கு கட்சி தேடும் பா.ஜ.க.விடம் சிக்கிய
நடிகர் சரத்குமார், அவரது சமத்துவ மக்கள் கட்சியை திடீரென கலைத்திருப்பது திடீர் திருப்பமாக
பார்க்கப்படுகிறது.
சில நாள்களுக்கு முன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர்
சரத்குமார், பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதி செய்தார். இந்த நிலையில் திடீரென தமிழ்நாடு
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தனது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்துவிட்டார்.
சென்னையில் ச.ம.க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை
பேசியதை அடுத்து, ராதிகா இரவு 2 மணிக்கு சம்மதம் கொடுத்த காரணத்தாலே சரத்குமார் கட்சியைக்
கலைத்ததாக சமூக வலைதளங்களில் கலாட்டா செய்கிறார்கள்.
இந்த இணைப்பு விழாவில் பேசிய அண்ணாமலை, ‘சரத்குமாருக்கு நான் ரசிகன்.
மற்ற அரசியல் தலைவர்கள் பேரம் பேசுவார்கள். ஆனால், இவர் அப்படியில்லை. நேற்றிரவு 2
மணியளவில் தொலைபேசியில் அழைத்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை மோடியுடன் இணைத்து,
2024 தேர்தலுக்காகப் பாடுபடப்போகிறோம் என்று கூறினார். சரத்குமார் எடுத்த இந்த முடிவை
வேறு யாரும் எடுக்க முடியாது. தமிழ்நாட்டு அரசியலில் ஒரு கட்சியை நடத்துவதே பெரிய விஷயம்.
அப்படியிருக்க இவரின் முடிவு மிக முக்கியமான முடிவு…’ என்று பாராட்டினார்.
இதையடுத்து இதுகுறித்து பேசிய சரத்குமார், ’இரவு என் மனைவியிடம்
இந்த முடிவு குறித்து பேசினேன். `எந்த முடிவெடுத்தாலும் நான் உங்களோடு உறுதுணையாக இருப்பேன்’
என்று கூறினார். எனவே, இது மக்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு. நம் நாட்டின் எழுச்சியின்
தொடக்கம்’ என்று கூறினார்.
இந்த இணைப்புக்கு 30 கோடி ரூபாய் விலை கொடுக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில்
பேசப்படுகிறது. எப்படியோ, நாட்டில் ஒரு கட்சிக்கு மூடு விழா நடத்தியதற்காக பா.ஜ.க.வுக்கு
நன்றி தெரிவிக்கலாம். மாமியாரின் ஆசைக்காக கட்சி நடத்திய சரத்குமார், மனைவியின் சொற்படி
கட்சியைக் கலைத்திருக்கிறார்.