Share via:
தமிழக அரசுக்கும் தமிழக கவர்னருக்கும் பல்வேறு விஷயங்களில் மோதல்
நடந்துவருகிறது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை கண்டுகொள்ளாமல் கவர்னர்
ஆர்.என்.ரவி டெல்லிக்குப் பயணம் கிளம்பியிருக்கிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு சென்னை
உயா்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. உச்ச நீதிமன்ற
தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார். திருக்கோவிலூர்
தொகுதி காலி என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அமைச்சராக பொன்முடிக்கு பதவியேற்பு செய்ய வேண்டும்
என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இன்று காலையில் பொன்முடி மீண்டும் அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று நம்பப்பட்டு வந்தது.
அதேநேரம், முதல்வரின் கடிதத்துக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து
நேற்று மாலை வரை எந்த பதிலும் கூறப்படவில்லை. இதற்கிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள்
பயணமாக இன்று காலை 6.50 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டு
சென்றார். வரும் 16ம் தேதி பிற்பகல் 12.40 மணிக்கு சென்னை திரும்புகிறார்.
சென்னையில் இருந்தால் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம்
செய்து வைக்க வேண்டும் என்பதற்காகவே கவர்னர் திடீர் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னைக்குத் திரும்பிய பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பாரா என்ற
கேள்வி எழுந்துள்ளது.