Share via:
தமிழகத்தில் மெகா கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி அடைவோம்
என்று கூறிவந்த எடப்பாடி பழனிசாமி, இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், ‘மக்களோடு
பலமான கூட்டணி வைத்திருக்கிறோம்’ என்ற புதிய கோஷத்தை எழுப்பியிருக்கிறார்.
ராமதாஸின் பா.ம.க.வும், பிரேமலதாவும் ஒரே நேரத்தில் அ.தி.மு.க.வுடனும்
பா.ஜ.க.வுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. இன்று தே.மு.தி.க.வுடன் இறுதிக்கட்ட
பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், எடப்பாடி பழனிசாமிக்கு
பிரேமலதா மீது முழு நம்பிக்கை வரவில்லை.
அதேபோல் ராமதாஸ் தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார்.
பா.ஜ.க.வின் தெளிவான முடிவு அறிந்தபிறகு அ.தி.மு.க.வுடன் பேசும் எண்ணத்தில் இருக்கிறார்.
ஆகவே, இரண்டு பேரும் மதில் மேல் பூனையாக இருக்கிறார்கள்.
ஆகவே தான், அதிமுக சார்பில்
நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மக்களோடு கூட்டணி என்று பேசினார் எடப்பாடி
பழனிசாமி. மேலும் அவர், ‘தமிழகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். பலமான கூட்டணி என்று சிலர்
கூறுகின்றனர். தமிழக மக்களோடு நாங்களும் பலமான கூட்டணி அமைத்திருக்கிறோம். எந்த கூட்டணி
பலமானது என்று தேர்தலில் தெரியத்தான் போகிறது. திமுக ஆட்சி முடியத்தான் போகிறது. தே.மு.தி.க.வுடன்
தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கடந்த 2014 தேர்தலில் வெற்றி பெற்ற 38 அதிமுக எம்பி.க்கள் மக்களவையில்,
தமிழக மக்களின் குரலாக ஒலித்தார்கள். இப்போது திமுக கூட்டணியில் 39 எம்பிக்களை வைத்துக்கொண்டு,
வாக்களித்த மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு
வாக்களித்தால் அது வீண்தான். அதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என ஓ.பன்னீர்செல்வம்
விரக்தியின் விளம்பில் பேசுகிறார். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள்
முகவரி தெரியாமல் போனார்கள். அதுபோல இவர்களும் போவார்கள்..’ என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் புதிய கட்சியான மன்சூர் அலிகான் கூட, பேச்சுவார்த்தையில்
பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருப்பது அ.தி.மு.க.வினரை சோர்வடைய வைத்திருக்கிறது.