Share via:
தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தொடர்ந்து தனித்துப்
போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்று வருகிறார் சீமான். வெற்றி பெறவில்லை என்றாலும்
அவரது கரும்பு விவசாயி சின்னம் தமிழகம் முழுக்க சென்று சேர்ந்துள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னம் கேட்டு தேர்தல்
ஆணையம் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தை அணுகினர். ஆனால், கரும்பு விவசாயி
சின்னம் பாரதிய பிரஜா ஐக்யதா என்ற கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. நீதிமன்றத்திலும்
சீமானுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
இதையடுத்து, கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை என்றாலும்
பரவாயில்லை, எங்கள் அண்ணன் சீமானே சின்னம் என்று அவரது தம்பிகள் சின்னம் இல்லாமலே தேர்தல்
பரப்புரையைத் தொடங்கிவிட்டார்கள்.
இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு சம்பந்தமில்லாத ,காவிரியில் தண்ணீர்
தர மாட்டோம் என சொல்கிற கன்னடரை தலைவராக கொண்ட கன்னட கட்சியான பாரதிய பிரஜா ஜக்யதா
கட்சி தமிழ்நாட்டில் 40 தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ஆளே இல்லாத கட்சிக்கு எப்படி 40 வேட்பாளர்கள் கிடைப்பார்கள்… யார்
இதற்கு செலவு செய்வது என்றெல்லாம் பலரும் பா.ஜ.க.வை நோக்கி குற்றம் சுமத்தி வருகிறார்கள்.
தி.மு.க. எதிர்ப்பு ஓட்டுகள் சீமானுக்குப் போகாமல் பா.ஜ.க.வுக்குக் கிடைக்க வேண்டும்
என்பதற்காகவே தமிழகத்தில் கரும்பு விவசாயி சின்னம் முடக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.
சீமானுக்கு என்ன சின்னம் என்பதையும் இன்னமும் தேர்தல் கமிஷன் அறிவிக்கவில்லை.
தேர்தல் சமயத்தில் தான் அறிவிக்கப்படும் என்கிறார்கள். இதுவரை கரும்பு விவசாயிகள் சின்னத்துக்கு
ஓட்டுப் போட்ட தம்பிகள், சின்னம் கை மாறிய தகவல் தெரியாமல், மீண்டும் கரும்பு விவசாயி
சின்னத்தில் முத்திரை குத்திவிடக் கூடாது என்பதுதான் நாம் தமிழர்களின் இப்போதைய கவலை.