Share via:
சி.வி.சண்முகம் ஐந்து முறை டாக்டர் ராமதாஸை நேரில் சந்தித்து கூட்டணி
குறித்து பேச்சுவார்த்தை நடத்திவந்தார். சேலம், தர்மபுரி போன்ற ஒருசில தொகுதிகளில்
உடன்பாடு ஏற்படும் சூழல் உருவானது. இதை அறிந்த பின்னரே பா.ஜ.க. நேரடி மிரட்டலில் ஈடுபட்டதாக
கூறப்படுகிறது.
மூன்றாவது முறையாக மோடியே பிரதமராக வர இருக்கிறார். ஆகவே, இனியும்
தவறான் முடிவு எடுத்தால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே உடனடியாக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.
உயர்நிலை குழு ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில்
நடந்த இக்கூட்டத்தில் தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல்
ராவணன், பொருளாளர் திலகபாமா, வடக்கு மண்டல இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி,வழக்கறிஞர்
கே.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி என்பது முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து காலை தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்த்துக்கு பாஜக மாநில தலைவர்
அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். இரு தரப்பினருக்கும்
இடையே நடந்த ஆலோசனையில் முடிவில் பாஜக – பாமக இடையிலான கூட்டணி தொடர்பான ஒப்பந்தம்
கையெழுத்தானது. இதில் 10 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அன்புமணி ராமதாஸ், “10 ஆண்டுகாலமாக பாட்டாளி
மக்கள் கட்சி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. வருகிற
மக்களவை தேர்தலை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திக்க கட்சி முடிவு
செய்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில்
மாற்றங்கள் வருவதற்காகவும் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். 60 ஆண்டுகளாக தமிழகத்தை
ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பான சூழல் இருக்கிறது. ஒரு மாற்றம்
வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யவே இந்த
முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.
எங்கள் கூட்டணி, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க
மிகப்பெரிய வெற்றி பெறும். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நிச்சயமாக
தேர்ந்தெடுக்கப்படுவார்” என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து அண்ணாமலை, ‘பிரதமரின் கரங்களை வலுப்படுத்தவும், தேசத்தின்
நலன் காக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய, பாட்டாளி மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது
பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, எளிய மக்களுக்கான
உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் ஐயா ராமதாஸ் அவர்கள், வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமரின்
நல்லாட்சி தொடர வேண்டும் என்று, தேச நலன் சார்ந்து முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது..’
என்று கூறியிருக்கிறார்.
நேற்று வரையிலும் அ.தி.மு.க.வுடன்
கூட்டணி என்ற நம்பிக்கையில் இருந்த பா.ம.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிர்ந்து நிற்கிறார்கள்.