Share via:
நாடாளுமன்றத் தேதி அறிவிக்கப்படும் முன்னதாகவே தி.மு.க. கூட்டணி
பங்கீடு வெற்றிகரமாக முடிந்துவிட்டது. கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் இணையவிடாமல்
தடுப்பதற்கு பா.ஜ.க. கடைசி நாள் வரையிலும் முயற்சி மேற்கொண்ட தகவலை தி.மு.க. மூத்த
தலைவர் ஆர்.எஸ்.பாரதி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
வரும் 2024
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான
கூட்டணியை ஆதரித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும்
என்று கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். 2025ம்
ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் 2026 சட்டமன்றத்
தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு கணிசமான தொகுதிகள் வழங்கப்படும் என்றும் உறுதி
வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, கமல்ஹாசன் அல்லது கமல்ஹாசன் கை காட்டும் நபர் அடுத்த ஆண்டு
எம்.பி. ஆவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டணி நிறைவேறக்
கூடாது என்பதற்காக, கடைசி நாள் வரையிலும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து
கமல்ஹாசனை தொடர்புகொண்டு பேசியதாகவும், அதனை கமல்ஹாசன் முழுமையாக புறக்கணித்துவிட்டே
தி.மு.க. பக்கம் வந்திருக்கிறார் என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருக்கிறார்.
தோற்றாலும் பரவாயில்லை,
தனியே நிற்பது மரியாதை என்று சிலர் சொன்னதையும் கமல்ஹாசன் புறக்கணித்திருக்கிறார்.
ஆகவே, தேர்தலில் நிற்காமலே எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்.
இதையடுத்து கடந்த
நாடாளுமன்றத் தேர்தலைவிட, இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் பலம் அதிகரித்திருக்கிறது.
கூட்டணியை உடைப்பதற்கு பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் மேற்கொண்ட முயற்சிகள் ஒட்டுமொத்த
தோல்வியைத் தழுவியிருக்கிறது.