Share via:
ஆன்மீக சொற்பொழிவாளரும், விஷ்வ பரிஷத் இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன், அம்பேத்கர், வள்ளுவர் உள்ளிட்டோரை இழிவுப்படுத்தி பேசியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அம்பேத்கர், திருவள்ளுவர், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட தலைவர்களை ஒருமையில் இழிவாக பேசியும், அவதூறு பரப்பும் வகையிலும் பேசி சர்ச்சையை கிளப்பினார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து ஆர்.பி.வி.எஸ். மணியனின் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் கடும் கண்டனத்தை தெரிவித்த மக்களும், ஆர்.பி.வி.எஸ். மணியனை கைது செய்ய வேண்டும் என்று ஊடகங்கள் வாயிலாக வலியுறுத்தினர்.
இந்நிலையில் இன்று காலை (வியாழன்) சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஆர்.பி.வி.எஸ். மணியனை சென்னை தெற்கு காவல் இணை ஆணையர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து ஆர்.பி.வி.எஸ். மணியனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பது குறித்து விரைவில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.